வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (05/04/2018)

கடைசி தொடர்பு:19:37 (09/04/2018)

`நகைக்காக மனைவி கொலை... கட்டப்பட்ட நிலையில் கணவன் மீட்பு' - வடபழனியில் பயங்கரம்

கொலை

 வடபழனியில் நகைக்காக இளம்பெண் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரைக் காப்பாற்ற சென்ற கணவரை, கழிவறையில் கட்டிப்போட்டுவிட்டு மர்மக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது.  

சென்னை வடபழனி, தெற்கு சிவன் கோயிலில் விஜயலட்சுமிக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், பாலகணேஷ் என்ற பிரபு வாடகைக்கு குடியிருந்துவருகிறார். இவர், அர்ச்சகராக உள்ளார். இவரின் மனைவி பிரியா. இவர்களுக்குத் திருமணமாகி 3 ஆண்டுகளாகின்றன. ஆனால், குழந்தைகள் இல்லை. வீட்டின் உரிமையாளர் விஜயலட்சமி, இன்று அதிகாலை கழிவறைக்குச் சென்றார். அப்போது, அங்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயக்க நிலையில் பாலகிருஷ்ணன் கிடந்தார். இதைப் பார்த்ததும் விஜயலட்சுமி அதிர்ச்சியடைந்தார். உடனே, அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.

பாலகிருஷ்ணனின் மனைவிக்கு தகவல் சொல்ல அவர் வீட்டுக்குச் சென்றனர். அங்கு பிரியாவும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்தார். இதனால், இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், அங்கு பிரியா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

கொலை

இந்தத் தகவல் தெரிந்ததும் வடபழனி போலீஸார் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய், கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்தனர். உதவி கமிஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் போலீஸார் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் விசாரித்தனர். அப்போது, கணவன், மனைவியைக் கட்டிப்போட்டுவிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட தகவல் தெரியவந்தது. ஆனால், கொள்ளைபோன நகைகள் எவ்வளவு என்ற விவரம் தெரியவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாலகிருஷ்ணனிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அவர் தெரிவிக்கும் தகவல் அடிப்படையில்தான் நடந்தது என்ன என்று தெரியும் என்று போலீஸார் தெரிவித்தனர். 

 பெயரைக் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திவருகிறோம். எங்களது முதற்கட்ட விசாரணையில், பாலகிருஷ்ணன், 'நானும் என் மனைவியும் தூங்கிக்கொண்டிருந்தோம். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. உடனே கதவைத் திறந்துபார்த்தேன். அப்போது வெளியில் இரண்டுபேர் நின்றுகொண்டிருந்தனர். யார் நீங்கள் என்று கேட்பதற்குள், என்னுடைய தலையில் இரும்புக் கம்பியால் ஓங்கி அடித்துவிட்டனர். அதில் நான் மயங்கிவிட்டேன் என்று கூறியுள்ளார். மயக்கம் தெளிந்தவுடன் பாலகிருஷ்ணன், என்னுடைய மனைவி எப்படியிருக்கிறார் என்று பதற்றத்துடன் எங்களிடம் கேட்டார். அதற்கு, நாங்கள் நன்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளோம். 

 அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து வருகிறோம். நகைக்காகக் கொலை நடந்துள்ளது என்று எங்களுடையை முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்த வழக்கில் சில சந்தேகங்கள் உள்ளன. அந்தச் சந்தேகங்களுக்குப் பாலகிருஷ்ணன் பதிலளித்தால் குற்றவாளியை எளிதில் கண்டறிந்துவிடலாம். கணவன், மனைவி என இருவரையும் மர்மக் கும்பல் துணியால் கட்டிப்போட்டுள்ளது. அதற்கு முன்பு இருவரும் அலறிய சத்தம் பக்கத்து வீடுகளுக்கு எப்படிக் கேட்காமல் இருந்தது, நெரிசல் மிக்க அந்த அடுக்குமாடி குடியிருப்பில் எப்படி மர்ம நபர்கள் உள்ளே வந்தனர் போன்ற சந்தேகங்கள் உள்ளன" என்றார். 

 ஆள்நடமாட்டமுள்ள பகுதியில் நகைக்காக நடந்த கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.