காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து ஓடும் பேருந்திலிருந்து குதித்த நெல்லை இளைஞர்! #WeWantCMB

காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து ஓடும் பேருந்திலிருந்து குதித்த நெல்லை இளைஞர்! #WeWantCMB

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி, ஓடும் பேருந்திலிருந்து குதித்த இளைஞர் பலத்த காயத்துடன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவிரி விவகாரத்தில் பேருந்தில் இருந்து குதித்த இளைஞர்

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள கோவைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், செல்வம். 32 வயதான இவர், கூலி வேலைகளைச் செய்து வந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், செல்வம் தன் நண்பர்களிடம் காவிரி விவகாரம் தொடர்பாக வேதனையுடன் பேசி வந்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், டெல்டா பகுதிகளில் விவசாயம் பொய்த்துப்போகும் ஆபத்து இருப்பது பற்றி கவலையுடன் பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில், கோவைக்குளம் செல்வதற்காக நெல்லை பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து இருந்த அவர், உடன் பயணித்தவர்களிடம் காவிரி குறித்து விவாதித்தபடியே வந்துள்ளார். உணர்ச்சிவசப்பட்ட அவர் திடீரென காவிரி வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்தும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியுள்ளார்.

அதன் பின்னர், ஓடும் பேருந்திலிருந்து பின்புற வாசல் பகுதி வழியாக அவர் குதித்துவிட்டார். பேருந்திலிருந்து விழுந்த வேகத்தில் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதியதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அத்துடன், முன் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். ஓடும் பேருந்தில் இருந்திலிருந்து ஒருவர் கீழே விழுந்ததை அறிந்த ஓட்டுநர், பேருந்தை நிறுத்தினார். 

கோவைக்குளம் செல்வம்

பலத்த காயத்துடன் மயங்கிக் கிடந்த செல்வத்தை 108 ஆம்புலன்ஸ் மூலமாகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாகப் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காவிரி விவகாரத்துக்காக இளைஞர் ஒருவர், ஓடும் பேருந்திலிருந்து குதித்த சம்பவம் நெல்லை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!