வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (05/04/2018)

கடைசி தொடர்பு:20:40 (05/04/2018)

சென்னை ட்ரெக்கிங் கிளப் நிர்வாகி பீட்டரைக் கைது செய்ய இடைக்காலத் தடை! #KuranganiForestFire

பீட்டர் வான் கெய்ட்டை கைது செய்ய இடைகால தடை விதித்து உத்தரவிட்டார்.

குரங்கணி தீ விபத்து தொடர்பான வழக்கில் சென்னை ட்ரெக்கிங் கிளப் நிர்வாகி பீட்டரை வரும் 12-ம் தேதி வரைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

பீட்டர் வான்கெய்ட்சென்னையில் வசித்து வரும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வான்கெய்ட் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ``சென்னை டிரெக்கிங் கிளப்பை கடந்த 2013 ம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறோம். இந்த அமைப்புக்கு யாரும் தலைமை வகிக்கவில்லை, யாரிடமும் நன்கொடை வசூலித்ததில்லை. இந்த அமைப்பில் உள்ள சிலர் முறையான அனுமதி பெற்றே 27 பேருடன் குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றுள்ளனர்.  ஆனால், குரங்கணியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பயிற்சியை ஒருங்கிணைத்த 4 பேர் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். 27 பேரையும் காட்டுக்குள் அனுமதிக்க வனத் துறையினர் கட்டணம் வசூலித்துள்ளனர். அதற்கான ரசீது இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்த நால்வரிடம்தான் இருந்துள்ளது. அவர்கள் இறந்த காரணத்தால், 27 பேரும் சட்டவிரோதமாக அனுமதியில்லாமல் காட்டுக்குள் நுழைந்ததாக வனத்துறையினரும், போலீஸாரும் கூறி வருகின்றனர்.

மலையேற்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இந்நிலையில் மலையேற்றப் பயிற்சிக்குத் தலைமை வகித்ததாகக் கூறி குரங்கணி போலீஸார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது முற்றிலும் தவறானது. எனவே இந்த வழக்கிலிருந்து எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் குரங்கணி காவல் ஆய்வாளர் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். அதனையடுத்து, ஏப்ரல் 12 ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாகவும், அதுவரை மனுதாரரை பீட்டர் வான் கெய்ட்டைக் கைது செய்ய இடைகாலத் தடை விதித்து உத்தரவிட்டார்.