வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (05/04/2018)

கடைசி தொடர்பு:21:00 (05/04/2018)

நடிகர் தனுஷுக்கு எதிராக மேலூர் தம்பதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு!

நடிகர் தனுஷுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

மேலூர் தம்பதி கதிரேசன் - மீனாட்சி

நடிகர் தனுஷ் மீது புதூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கை விசாரிக்க வேண்டும் என மேலூர் எம்.மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியனர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்துள்ளனர்.

அதில், ``உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த விசாரணையின் போது தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை. அவை போலியாக தயாரிக்கப்பட்டது. எனவே, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5  ம் தேதி கோ.புதூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தோம். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் அதிகாரி, பெற்றுக்கொண்டதற்கான எந்தவித ரசீதும் வழங்கவில்லை. புகார் மனு குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ம் தேதி மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்ததேன். அதன் பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் பிறகு இதுகுறித்து நடிகர் தனுஷுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினேன். இதுவரை எந்தவித பதிலும் இல்லை. எனவே, உயர்நீதிமன்ற விசாரணையின் போது நடிகர் தனுஷ் தனது தரப்பில் தாக்கல் செய்த சான்றிதழ்கள் போலியானவை என்ற எனது புகார் குறித்து மதுரை புதூர் காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்’’ என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வார காலத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.