வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (05/04/2018)

கடைசி தொடர்பு:22:00 (05/04/2018)

`ஏப்ரல் 3 தோல்வி... ஏப்ரல் 5 வெற்றி!’ - ஆதங்கத்தை வேறுபடுத்திக் காட்டிய காவிரி டெல்டா மக்கள்

தமிழ்நாடு முழுவதும் காவிரி தொடர்பான போராட்டங்கள் நடைபெறும்போது மத்திய மாநில அரசுகள் தஞ்சையை உன்னிப்பாக உற்று நோக்குவது வழக்கம். காவிரி பாயக்கூடிய பிரதான மாவட்டங்களில் தஞ்சை முதன்மையானது. காவிரி பிரச்னையில் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது இதன்மூலமே அறிந்துகொள்ளப்படும்.   

காவிரிக்காக போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல் 3-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தியது ஆளுங்கட்சியான அ.தி.மு.க. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடையடைப்பு அறிவித்தது. காவிரி பிரச்னை உச்சத்தில் இருப்பதால் ஏப்ரல் 3-ம் தேதி தஞ்சையில் கடையடைப்பு முழுமையாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிர்ச்சி அளிக்கும் வகையில் தஞ்சை மக்கள், தங்களது எண்ணங்களை மிகத்தெளிவாக வெளிப்படுத்தினார்கள். அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதம் நடத்திய தஞ்சை ரயில் நிலையம் பகுதியில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன. ’’கண் துடைப்புக்காகதான் உண்ணாவிரதம் இருக்காங்க. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அ.தி.மு.க. அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கலை. உண்மையான அக்கறை இருந்தால் மத்திய அரசுக்கு அரசியல் ரீதியான நெருக்கடியைக் கொடுத்திருக்கணும். இவங்க நடத்துற நாடகத்தை நாங்க நம்பமாட்டோம். அதனால்தான் கடைகளை மூட வேண்டாம்னு முடிவெடுத்தோம்” என்றார்கள். வணிகர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களும் தங்களது வழக்கமான பணிகளைக் கொஞ்சமும் குறைத்துக் கொள்ளவில்லை. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல் ஓடின.

ஆனால், இன்று தஞ்சை மாவட்டம் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்து, தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் இன்று முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், தஞ்சையின் அனைத்துப் பகுதிகளிலும் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பிரதான சாலைகள், வீதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் நிசப்தமாகவே இருந்தது. காவிரிக்காக என்று சொல்லிவிட்டாலே எல்லாப் போராட்டங்களையும் மக்கள் ஆதரித்து விடமாட்டார்கள். இதன் வெளிப்பாடுதான் ஏப்ரல் 3-ம் தேதி நடந்த கண்துடைப்புப் போராட்டம் தோல்வியுற்று, இன்றைய போராட்டம் வென்றுள்ளது.