வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (06/04/2018)

கடைசி தொடர்பு:13:49 (06/04/2018)

பீட்சா தோசை, சப்பாத்தி வெஜ் ரோல், முந்திரி ரைஸ். பள்ளிக் குழந்தைகளுக்கான ஈஸி அண்டு ஹெல்தி ரெசிபி

பீட்சா தோசை, சப்பாத்தி வெஜ் ரோல், முந்திரி ரைஸ். பள்ளிக் குழந்தைகளுக்கான ஈஸி அண்டு ஹெல்தி ரெசிபி

சி.பி.எஸ்.இ குழந்தைகளுக்குப் பள்ளி திறந்துவிட்டது. புது கிளாஸ் ரூம், புது டீச்சர் என்று பள்ளியை எதிர்கொள்ளப் போகும் குழந்தைகளுக்கு நல்ல உணவைக் கொடுக்க வேண்டும். பெரியவர்களுக்குக் கொடுக்கும் உணவையே குழந்தைகளுக்கும் கொடுத்தால் லன்ச் பாக்ஸ் அப்படியே திரும்ப வரும் என்பது அம்மாக்களுக்குத் தெரியும். காலையில் எட்டரைக்குள் பள்ளியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் குழந்தைகள். அதற்குள் அவர்களுக்கு லன்ச் தயாரிக்க வேண்டிய டென்சனில் அம்மாக்கள்... எளிதாக, அதே சமயம் ஹெல்தியாக என்ன ரெசிப்பிகள் சமைக்கலாம் என்று சமையல் நிபுணர் லதாமணி ராஜ்குமாரிடம் கேட்டோம்.

ரெசிப்பிகள்

லெமன் மினி இட்லி

 இட்லிப் பிடிக்காத பிள்ளைகள்கூட மினி இட்லியை விரும்புவார்கள். கடையில் இதற்கென்று விற்கும் இட்லி தட்டுகளை வாங்கிக் கொள்ளுங்கள். இட்லி வேக வைத்தெடுத்துக் கொள்ளுங்கள்.

லதாமணி ஒரு வாணலியில் செக்கு நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இத்துடன் அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு மஞ்சள்பொடி, உப்புச் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விடவும். பச்சை வாசனைப் போனதும் அவித்த இட்லிகளைச் சேர்த்து கிளறி இறக்கவும். குட்டிக்குட்டி இட்லிகளின் அழகுக்கும், செக்கு நல்லெண்ணெய்யின் வாசனைக்கும் சமர்த்தாக சாப்பிட்டு விடுவார்கள் பிள்ளைகள்.

மினி சைனீஸ் இட்லி

 கேரட் மற்றும் குடை மிளகாயைத் துருவி நெய்யில் வதக்கி, அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவிக் கொள்ளவும். பச்சை வாசனைப் போனதும் இத்துடன் மினி இட்லிகளைப் போட்டு புரட்டி லன்ச் பாக்ஸில் பேக் செய்யவும். 

இட்லி ரெசிப்பி

பீட்சா கல் தோசை

  குட்டிக் குட்டியாக கல் தோசை ஊற்றிக் கொள்ளுங்கள். சிறிய துண்டு உருளைக்கிழங்கைப் பெரிய துருவலில் துருவி, உப்புப் போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். ஒரு பக்கம் மட்டும் வெந்த தோசையின் மீது உருளைத் துருவலைத் தூவி, மேலே ஒரு டீஸ்பூன் வெண்ணெய்விட்டு, சிறிதளவு இட்லிப் பொடித் தூவி, அடுப்பை அணைத்து விடவும். பீட்சா கல் தோசை ரெடி.  

தோசை ரெசிப்பி

சப்பாத்தி வெஜ் ரோல்:

   இரவே ஓர் உருளைக்கிழங்கை வேக வைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள். காலையில் சிறிதளவு கேரட் துருவல் அல்லது பீட்ரூட் துருவல் அல்லது கோஸ் துருவலை ரெடி செய்து கொள்ளவும். உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் உப்பு, காரம், காய்கறித் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்து வைக்கவும். இரண்டே இரண்டு சப்பாத்திகளைத் திரட்டி, அதில் பிசைந்து வைத்துள்ள ஸ்டஃபிங்கை வைத்து ரோல் செய்து, இரண்டாக கட் செய்து, செக்குக் கடலை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். நிச்சயம் லன்ச் பாக்ஸ் காலியாகத்தான் திரும்பி வரும். 

சத்துமாவு ரோல்:

  வீட்டில் இருக்கிற காய்கறிகளைத் துருவி, உப்பு மற்றும் காரம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். சத்துமாவைக் கரைத்து மெல்லிய தோசைகளாக வார்த்துக் கொள்ளவும். இதன் மேல் வதக்கிய காய்கறித் துருவலைப் பரப்பி வைத்து ரோல் செய்யவும். 

ரோல்

சத்துமாவு ரொட்டி:

சத்துமாவுடன் சிறிதளவு கோதுமை மாவு சேர்த்து பிசைந்து, இரண்டு சப்பாத்திகளாக திரட்டி வைக்கவும். தோசைக்கல்லில் வெண்ணெய் விட்டு உருகியதும் மாவை இருபுறமும் சுட்டெடுக்கவும். நிச்சயம் லன்ச் பாக்ஸ் காலியாக வரும். 

நூடுல்ஸ் வித் கொண்டைக்கடலை:

இரவு ஊறவைத்த கொண்டைக்கடலையை உப்புப் போட்டு வேக வைத்துக்கொள்ளவும். சேமியா/ ராகி நூடுல்ஸை கொதிக்கிற தண்ணீரில் போட்டு, வேக விடவும். வெந்ததும் நீரை வடித்து, கொண்டைக்கடலையுடன் கலந்து, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால், சத்தான லன்ச் ரெடி. 

சேமியா

முந்திரி ரைஸ்:

பாஸ்மதி அரிசி அல்லது சீரகச் சம்பா அரிசி எப்போதும் உங்கள் வீட்டில் இருந்தால், பல சுவையான ரெசிப்பிகளை சில நிமிடங்களில் செய்துவிடலாம். அரிசியை உப்புப் போட்டு வேக வைத்து, வடித்துக் கொள்ளவும். நெய்யில் சிறிதளவு பட்டை, சோம்பு தாளித்து, பச்சை மிளகாய், முந்திரி, புதினா இலைகளைப் போட்டு வதக்கவும். இதனுடன் வேக வைத்த சாதத்தைப் போட்டுக் கிளறினால் லன்ச் ரெடி. 

முந்திரிக்குப் பதில் வதக்கிய பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது நெய்யில் வதக்கிய பாதாம், பிஸ்தா, உலர்ந்த திராட்சை சேர்த்து கிளறிக் கொள்ளலாம். 

மேலே உள்ள ரெசிப்பிகளை அடிப்படையாக வைத்து, இன்னும் பல ஈஸி ரெசிப்பிகளை கண்டுபிடித்து, உங்கள் வீட்டுக் குட்டிகளுக்கு லன்ச் பேக் செய்யுங்கள் அம்மாக்களே...

 


டிரெண்டிங் @ விகடன்