சென்னைக்குப் புதிதாகப் புறநகர் பேருந்து நிலையம்! ஓ.பி.எஸ் ஆய்வு!

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே புதிய புறநகர் பேருந்து நிலையம் அமையவிருக்கும் இடத்தை துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார்.

இரண்டு வருடங்களில் வண்டலூருக்கு அருகில் புதிதாக பேருந்துநிலையம் கட்டி முடிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தென்மாவட்டங்களிலிருந்து சென்னைக் கோயம்பேட்டிற்கு செல்லும் பேருந்துகளால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், புறநகர் பகுதியில் சென்னைப் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவந்தது.

கடந்த வருடம் காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க உள்ளதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று புறநகர் பேருந்து நிலையம் அமையவுள்ள பகுதியை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர் செல்வம், ``வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் சென்னைப் புறநகர் பேருந்து நிலையம் அமைய உள்ளது. இதற்காக 88.52 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில், 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதற்காக 321 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, இன்னும் ஓரிரு நாளில் பணிகள் ஆரம்பிக்க இருக்கின்றன.

இந்தப் பேருந்து நிலையம் மூலமாக தென்மாவட்டங்களுக்கு தினந்தோறும் 250 பேருந்துகள் இயக்கப்படுகின்ற சூழல் இருக்கும். இங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மாநகரின் பல பகுதிகளுக்கும் செல்லும் அளவுக்கு மாநகரச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதற்காக 5 ஏக்கர் பரப்பளவில் சிறிய பேருந்து நிலையம் ஒன்றும் இங்கு செயல்படும். தங்கும் வசதி, பயணிகள் ஓய்வறை, மருத்துவமனை, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் இங்கு செய்து தர இருக்கிறோம். இன்னும் இரண்டு மாதங்களில் வரைவு திட்டம் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கிவிடும். இரண்டு வருடத்தில் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டுவிடும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!