திருச்செந்துரில் அனுமதியின்றி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பேரணி.. 120 பேர்மீது வழக்கு

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி  திருச்செந்தூரில்  ஊர்வலமாகச் சென்றதாக பச்சைத்தமிழகம் கட்சித் தலைவர் சுப.உதயகுமார் உட்பட 120 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

protest against sterlite

ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தற்போது செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 50 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கரப்பேரி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியாபுரம், பண்டாரம்பட்டி, சில்வர்புரம் ஆகிய கிராமங்களிலும் போராட்டம் விரிவடைந்து வருகிறது. கிராம மக்கள் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி வருகின்றன. அமெரிக்கா, லண்டனில் வாழும் தமிழர்களும் ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை விதிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

rally against sterlite

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி திருச்செந்தூரில் கடந்த 3-ம் தேதி கடையடைப்பு, பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் திருச்செந்தூர் பழைய பேருந்து நிலையம்  முன்பு இருந்து தேரடி திடலை நோக்கி கோஷம் எழுப்பியவாறே பேரணியாகச் சென்றனர். இதில் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டுமே போலீஸார் அனுமதி வழங்கினர்.

ஆனால், அனுமதியின்றி பேரணியாகச் சென்றதாக பச்சைத்தமிழகம் கட்சித் தலைவர் சுப.உதயகுமார் மற்றும்  ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவினர் 6 பேர் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேர் மீது திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!