வெளியிடப்பட்ட நேரம்: 08:28 (06/04/2018)

கடைசி தொடர்பு:08:28 (06/04/2018)

மத்திய அரசைக் கண்டித்து கறுப்பு பேட்ஜ் போராட்டம்..! நெல்லை பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

காவிரி விவகாரத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளனர்.

கருப்பு பேட்ஜ் போராட்டம் - பல்கலைக் கழகம்

நெல்லையில் செயல்பட்டு வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் ஆசிரியர்கள் சங்கமான `மூட்டா’ அமைப்பின் பொதுச்செயலாளரான நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தமிழக மக்களை ஏமாற்றிய வலி இன்னும் தீர்ந்தபாடில்லை. அதற்குள் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிரான தொடர் நடவடிக்கையால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி வேடிக்கை பார்க்கிறது.  

காவிரியிலிருந்து தமிழகம் தனக்குரிய நியாயமான பங்கைப் பெறாமல் தவிப்பது ஓராண்டு, ஈராண்டல்ல. வஞ்சிக்கப்பட்ட தமிழகம் பல்லாண்டுகளாக மத்திய அரசு, நடுவர் மன்றம், நீதிமன்றம் எனப் பல ஜனநாயக அமைப்புகள் மீது நம்பிக்கை வைத்து மோசம் போனது தான் மிச்சம். நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின்னர், இந்திய உச்ச நீதிமன்றம் தன் பங்குக்குத் தமிழகத்திற்குரிய நீரைக் குறைத்தது. ஆனாலும், வரையறுக்கப்பட்ட நீரை முறையாக விநியோகம் செய்ய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டது. 

மத்திய அரசு கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு மேலாண்மை வாரியம் மட்டும் அல்ல, எந்த அமைப்பையும் அமைக்க முன்வரவில்லை. இந்த உள்நோக்கத்தோடு இப்போது உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு மனு செய்துள்ளது. தமிழக மக்கள் நலனுக்கு எதிரான மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் போக்கை `மூட்டா’ வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக நலனைப் பாதுகாக்கத் தவறிய மாநில அரசு, குறுகிய சுயநல அரசியல் பார்வையைக் கைவிட்டு தமிழகத்தின் காவிரி உரிமையைப் பாதுக்காக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மூட்டா வற்புறுத்துகிறது. 

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி முதல்கட்டமாக மூட்டா ஆசிரியர்கள் வரும் 6-ம் தேதி (நாளை) கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்ய உள்ளோம். அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் மூட்டா முன்னெடுக்கும்’’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஏற்கெனவே மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில், தற்போது ஆசிரியர்களும் போராட்டக் களத்தில் இறங்கி இருப்பதால் மாணவர்களின் போராட்டத்தின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.