கோயில் பிரசாதம் சாப்பிட்ட 2 பெண்கள் பலி..! 42 பேருக்கு உடல்நலக்குறைவு..! கோவையில் அதிர்ச்சி!

கோவை, மேட்டுப்பாளையத்தில், கோயில் பிரசாதம் சாப்பிட்ட இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   பிரசாதம் சாப்பிட்ட 2 பேர் பலி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், நாடார் காலனியில் ஸ்ரீ செல்வவிநாயகர் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனிடையே, அந்தப் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்களுக்கு திடீரென குளிர் காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள், பெரியவர்கள் என சுமார் 31 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உரிய சிகிச்சைக்குப் பின்னர், 12 பேர் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றுச் சென்றனர் .2 குழந்தைகள் உள்பட 19 பேர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பிரசாதம் சாப்பிட்ட 11 பேருக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 42 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரசாதத்தால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்த, லோகநாயகி (62), சாவித்திரி(60) ஆகிய இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் .இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் ரங்கராஜன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரசாதத்தில் அசல் நெய்க்கு பதிலாக, தீபம் ஏற்றும் நெய் பயன்படுத்தியதுதான், இந்த விபத்துக்குக் காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் கோவை மக்களை அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!