வெளியிடப்பட்ட நேரம்: 09:08 (06/04/2018)

கடைசி தொடர்பு:09:08 (06/04/2018)

அருண் ஜெட்லி எம்.பி-யாக பதவியேற்காததற்கு இதுதான் காரணம்...!

அருண் ஜேட்லி

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று எம்.பி-யாகப் பதவியேற்கவில்லை.

அருண் ஜெட்லிக்குச் சிறுநீரகக் கோளாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதியமைச்சரும், பி.ஜே.பி. மூத்த தலைவருமான அருண் ஜெட்லிக்குத் தற்போது 65 வயதாகிறது. கடந்த 2014-ம் ஆண்டில் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு உடல் எடைக் குறைப்புக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தனியார் மருத்துவமனையிலும், அதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தாலும், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாகி, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து வருகிறார். ஜெட்லியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர் மீண்டும் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தமுறை உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

பி.ஜே.பி-யின் மாநிலங்களவைக் குழுத் தலைவராக அருண் ஜெட்லி மீண்டும் நியமிக்கப்பட்டார். எனினும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் இன்னும், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவில்லை. அவருக்குச் சிறுநீரகக் கோளாறு உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். `நோய்த் தொற்று ஏற்படும் என்பதால் வெளியில் செல்ல வேண்டாம்' என ஜெட்லியிடம் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, வீட்டிலிருந்தவாறே தன் அமைச்சகப் பணிகளை கவனித்து வருகிறார்.

எனினும் அருண் ஜெட்லிக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுமா என்பது பற்றி மருத்துவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்கவில்லை. அடுத்த சில தினங்களில் அவர் எம்.பி-யாகப் பதவியேற்றுக் கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க