வெளியிடப்பட்ட நேரம்: 08:54 (06/04/2018)

கடைசி தொடர்பு:08:54 (06/04/2018)

`பிட் பிளாஸ்ட் முறையில் தார்ச்சாலை' - பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாகும் கரூர்!

`கரூர் மாவட்டம் விரைவில் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும். அதோடு இந்தியாவிலேயே முதன்முறையாக கரூரில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறையான ஈரச்செயல்முறையில் ரூ.29.35 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது' என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் சாலை

இன்று நிலத்தடி நீர்தேக்க, சுற்றுச்சூழலுக்கு என்று பல்வேறு விசயங்களுக்குப் பெரும் சிக்கலாக இருப்பது இந்த பிளாஸ்டிக்குகள்தாம். எங்கு காணினும் பிளாஸ்டிக் என்று சொல்லும் அளவுக்கு பிளாஸ்டிக்குகளால் நிறைந்திருக்கிறது தமிழகம். இந்தச் சூழலில், கரூர் மாவட்ட நிர்வாகம் அந்த பிளாஸ்டிக்குகளைச் சேகரித்து, அதைக் கொண்டு நவீன முறையில் தார்ச்சாலை அமைக்கும் முயற்சியை எடுத்திருப்பது வரவேற்பை பெற்றிருக்கிறது. கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சியில் NH-7 முதல் கவுண்டாயூர் வழி கொங்கு பள்ளி வரை ரூ.29.35 லட்சம் மதிப்பில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி ஈரச்செயல்முறையில் புதிய தொழில்நுட்பத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பார்வையிட்டார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, ``புதிய ஈரச்செயல்முறை தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் தார்ச்சாலைகள் உறுதியுடனும், இரு மடங்கு கூடுதலாக நீண்ட காலம் உழைக்கக் கூடியதாகவும் மற்றும் கனமழை பெய்தாலும் தாங்கக்கூடிய வகையிலும் உள்ளது. மேலும், இம்முறையில் தாச்சாலை அமைக்கும் போது, முழு அளவு பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்த முடியும். பிட் பிளாஸ்ட்(Bitplast) தொழில்நுட்பம் மத்திய அரசின் இந்தியச் சாலை கூட்டமைப்பின் (IRC) அங்கீகாரம்  பெறப்பட்டுள்ளது. 

இத்தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட சாலைகளை தேசியத் தொழில்நுட்பக் கல்லூரி(NIT) ஆய்வு செய்யப்பட்டதில் உலர்முறை(Dry Process) பிளாஸ்டிக் சாலையைவிட இத்தொழில்நுட்ப முறை சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக மென்ஸ் பிட்டுமனஸ் மெக்கடம் மற்றும் செமி டென்ஸ் பிட்டுமனஸ் கான்கிரீட்(Mense Bituminay Macadam and Semidense Bituminous Concrete) முறையில் அமைக்கப்பட்டுள்ளது. பிட் பிளாஸ்ட் (Bitplast) முறையில் தார்ச்சாலை அமைப்பதால் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள சாலைக்கு 800 கிலோ மீட்டர் வரை ஊரகச் சாலைகளுக்கும், 4000 கிலோ வரை மாநில நெடுஞ்சாலைகளுக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை மிக எளிதாகப் பயன்படுத்த முடியும். 

இதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும், அந்நியச் செலவாணி மிச்சப்படுத்தப்படும். பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து வழங்குவதால், சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரம் முன்னேறும். கரூர் மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தரம் பிரித்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைச் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஆணையர், செயல் அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர்களைத் தொடர்பு கொண்டு வழங்கினால், உரிய விலை கொடுத்து பெற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம், இந்தியாவிலேயே முதல் முறையாக கரூர் மாவட்டம் பிளாஸ்டிக் இல்லா பசுமை மாவட்டமாக விரைவில் மாற்றப்படும்" என்றார்.