வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (06/04/2018)

கடைசி தொடர்பு:11:55 (06/04/2018)

தொழுவத்தில் புகுந்து ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை! அச்சத்தில் மக்கள்

நெல்லை மாவட்டம் கடையம் அருகே வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் புகுந்து ஆடுகளை அடித்துக் கொன்ற சிறுத்தை, இன்னும் பிடிபடாமல் இருப்பது பொதுமக்களை அச்சம் அடைய வைத்துள்ளது.

நெல்லை மாவட்டம், கடையத்தில் வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் புகுந்து ஆடுகளை அடித்துக்கொன்ற சிறுத்தை, இன்னும் பிடிபடாமல் இருப்பது பொதுமக்களை அச்சம் அடைய வைத்துள்ளது. 

தொழுவத்தில் புகுந்து ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை! அச்சத்தில் மக்கள்

நெல்லை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு என்ற கிராமத்தில் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயமே இவர்களின் பிரதானத் தொழிலாக உள்ளது. இந்தக் கிராம மக்களுக்கு வனவிலங்குகளால் அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இந்தக் கிராமத்தின் உள்ளே நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்திய 8 சிறுத்தைகளை இதுவரையிலும் வனத்துறையினர் பிடித்துச் சென்று வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக ஊருக்குள் நுழைந்த சிறுத்தையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த மார்ச் 19-ம் தேதி முருகன் என்பவரது வீட்டில் காவலுக்கு இருந்த நாயை அடித்து இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர், வன்னிராஜ் என்பவரது வீட்டில் இருந்த நாயை அடித்துச் சென்றதுடன், ஊருக்குள் பல்வேறு தெருக்களிலும் அதன் கால்தடம் பதிவாகி இருந்ததால் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவே அச்சம் அடைந்திருந்தனர்.

இந்தச் சூழலில், நாகேந்திரன் என்பவரது வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் நுழைந்து அங்கு கட்டிப் போடப்பட்டிருந்த இரு ஆடுகளை அடித்துக் கொன்றது. ஓர் ஆட்டைச் சாப்பிட்ட சிறுத்தை மற்றொன்றை இழுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளது. அதற்குள்ளாக ஆடுகளின் சத்தம் கேட்டு நாகேந்திரன் அங்கு சென்றதால், சிறுத்தை தப்பிச் சென்றது.

கிராமத்துக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையால் பீதி அடைந்துள்ள பொதுமக்கள் விளை நிலங்களுக்குச் செல்லவே அச்சப்படும் நிலையில் உள்ளனர். சிறுத்தைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதால் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும், அச்சுறுத்தும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.