வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (06/04/2018)

கடைசி தொடர்பு:13:52 (06/04/2018)

சென்னையில் 16 வயது மகனால் அம்மாவுக்கு சிக்கல்! - தோழியுடன் சென்றபோது விபத்தில் பலியானார்

16 வயது மகன் விபத்தில் பலி

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் பள்ளித் தோழியுடன் பைக்கில் சென்ற மாணவன் விபத்தில் பலியானார். மாணவன் ஓட்டிய பைக் மோதி வாலிபர் ஒருவரும் இறந்தார். மேலும், சென்னையில் முதல்முறையாக 16 வயது மகனை பைக் ஓட்ட அனுமதித்த பெற்றோர்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரோஹித். இவர், அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்தார். இவர், நேற்று தன்னுடைய தோழி ஒருவருடன் பைக்கில் அம்பத்தூர் எஸ்டேட் பகுதிக்குச் சென்றார். அம்பத்தூர் எஸ்டேட் சாலையைத் திருமங்கலத்தைச் சேர்ந்த பாபு என்பவர் கடந்துள்ளார். அப்போது, ரோஹித்தின் பைக், பாபுமீது மோதியது. இதில் ரோஹித், அவரின் தோழி, பாபு ஆகிய மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

 சம்பவ இடத்திலேயே பாபு இறந்துவிட்டார். காயமடைந்த ரோஹித், அவரின் தோழியைப் போலீஸார் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இரவில் ரோஹித் சிகிச்சை பலனின்றி இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ரோஹித்தின் தோழிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கடந்த 22.3.2018-ல் சென்னைப் போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட அறிவிப்பில், 18 வயதுக்கு குறைவானவர்கள் பைக் ஓட்டினால் அந்த வாகனத்தின் உரிமையாளர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர். போலீஸார் அறிவித்த பிறகு முதல் வழக்காக ரோஹித்தின் அம்மாமீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, யாரும் 18 வயதுக்கு குறைவானவர்களை பைக் ஓட்ட அனுமதிக்காதீர்கள். அவ்வாறு அனுமதித்தால் சட்டப்படி வாகனத்தின் உரிமையாளர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.