`நன்றாகப் பேச்சு வர வேண்டும்!' - ஓசை நாயகி அம்மனை வழிபட்ட விஜயகாந்த்

வாய் குளறல் குணமாக கோவிலில் வழிபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தன் மகன் பிறந்த நாளுக்காகவும் தனக்குப் பேசும்போது ஏற்படும் வாய்குளறல் குணமாகவும் கோயிலுக்குச் சென்ற விஜயகாந்த், அங்கு சிறப்பு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தார். 'சீக்கிரமே கேப்டன் பழைய பன்னீர் செல்வமா வந்து அதிர்வேட்டு அரசியல் பேச்சுக்களை எல்லோர் முன்பும் பேசுவார்' என உற்சாகம் பொங்க சொல்கிறார்கள் தே.மு.தி.க-வினர்.

விஜயகாந்த்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று தன் மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன் தன் மகன் சண்முகபாண்டியன் பிறந்த நாளுக்காகக் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு வந்து சிறப்பு சாமி தரிசனம் செய்தார்.
காலை 7 மணிக்கெல்லாம் கோயில் வளாகத்துக்குள் வந்துவிட்ட விஜயகாந்த், அம்பாள் சந்நிதிக்கு முன்  நீண்டநேரம் உட்கார்ந்திருந்தார். அங்கு மூலவருக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதோடு, பொங்கல் வைத்துச் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது தன் குடும்பத்தோடு சாமி கும்பிட்ட விஜயகாந்த் கோயில் யானையிடம் ஆசீர்வாதம் வாங்கினார்.

பின்னர், அந்த யானைக்கு அவரே வாழைப்பழம் ஊட்டிவிட்டதோடு கோயிலில் கூடியிருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். சுமார் 1.30 மணி நேரம் கோயிலுக்கு உள்ளேயே இருந்து சாமி தரிசனம் செய்தார் விஜயகாந்த். இதில் முக்கிய நிர்வாகிகள் ஒரு சிலர் மட்டுமே உடன் வந்திருந்தனர். மகன் பிறந்த நாளுக்காகக் தரிசனம் செய்ய வந்திருந்த விஜயகாந்த் சோர்வாகக் காணப்பட்டார். அவரால் சரி வர நடக்கக்கூட முடியவில்லை, நீண்ட நேரம் நிற்கவும் முடியவில்லை, சீக்கிரமே இந்தப் பிரச்னையில் இருந்து கேப்டன் மீள வேண்டும் என்றும் அக்கறையோடு பேசிக்கொண்டனர் நிர்வாகிகள்.

அவர்களிடம் பேசினோம். ''எங்க கேப்டனோட ப்ளஸ்ஸே அவரோட பேச்சுதான். ஆனால், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சமீபகாலமாக அவரால் சரியாகப் பேச முடியவில்லை. பேசும்போது வாய்குளறும் அதைப் பலர் விமர்சனம் செய்தும் வந்தார்கள். கேப்டன் பழையபடி உற்சாகத்தோடு அதிவேக பேச்சோடு வர இருக்கிறார். அதற்கான சிகிச்சைகள் எல்லாம் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மகன் பிறந்த நாளுக்காக சாமி தரிசனம் செய்ய வந்த விஜயகாந்த் இன்று மாலை திருவாரூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்கிறார்.

விஜயகாந்த்- பிரேமலதா

நேற்று, சீர்காழி அருகே உள்ள திருக்கோலக்காவில் தாளபுரீஸ்வரர் கோயிலிலும் விஜயகாந்த் மற்றும் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன் வழிபட்டார். இங்குள்ள ஓசை நாயகி அம்மன் சந்நிதியில் தேன் வைத்துச் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் வாய் குளறுதல், திக்குதல் போன்ற பேச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவாக இருந்தாலும் குணமாகும் என்பது  நம்பிக்கை. அதன்படி விஜயகாந்த் ஓசை நாயகி அம்மனை வழிபட்டார். அவருக்காகத் தேன் வைத்துச் சிறப்பு பூஜைகள் செய்து சாமிதரிசனம் செய்த பிறகு, கோயில் குருக்கள் விஜயகாந்த் வாயில் சில சொட்டுக்கள் தேன் ஊற்றினார். அந்தத் தேனை வைத்துக்கொண்டு அம்மனை நினைத்து வணங்கிச் சாப்பிட்டு வந்தால் வாய்குளறல் பிரச்னை நீங்கிவிடும். நீங்க பழையபடி பேசுவீங்க என விஜயகாந்த்திடம் தெரிவித்தார் கோயில் குருக்கள்.

இதன் மூலம் மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக எங்க கேப்டன் சீக்கிரமே வருவார் என உற்சாகம் பொங்க கூறினார்கள் தே.மு.தி.க-வினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!