வெளியிடப்பட்ட நேரம்: 14:18 (06/04/2018)

கடைசி தொடர்பு:14:18 (06/04/2018)

`உயிருக்கு உத்தரவாதம் இல்லை; பாதுகாப்புக்கொடுங்கள்'- கூட்டுறவு அதிகாரிகள் குமுறல்

``தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இருந்துவருகிறோம். எங்களுக்குப் பாதுகாப்பு கொடுங்கள்'' என்று கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                       கூட்டுறவு சங்கத் தேர்தல் வன்முறை

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 240 கூட்டுறவுச் சங்கங்களுக்கு, சங்கத்துக்குத் தலா 11 நிர்வாகக்குழு உறுப்பினர்களைத் தேர்வுசெய்ய 4 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேர்தல் தொடங்கியது முதல் ஆளுங்கட்சியினரின் அராஜகத்தால் ஏழெட்டுச் சங்கங்களின் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆளுங்கட்சியினரின் நெருக்கடியால், உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுகளால் மனுக்கள் பரிசீலனை போன்ற தேர்தல் பணிகளுக்கே செல்ல முடியாமல் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் தடுமாறி வருகின்றனர். பல்வேறு பக்கங்களில் இருந்துவரும் நெருக்கடியால் தேர்தல் பணிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சில அதிகாரிகளிடம் பேசினோம்.``கூட்டுறவுச் சங்கத் தேர்தலை முறையாக நடத்தி வருகிறோம். ஆனால் அதிமுக, திமுகவின் உட்கட்சி பிரச்னையை மனதில் வைத்துக்கொண்டு எங்களைத் தாக்க வருவது எந்த விதத்தில் நியாயம். அதேபோல் வேப்பந்தட்டை ஏரியாவில் சரியான முறையில் தேர்தல் நடந்துகொண்டிருந்தபோது அதிமுகவினர் நான்கு டாடா சுமோக்களில் கூட்டமாக வந்து மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்து வாக்கு பெட்டிகளைத் தூக்கவந்தனர். அதனைத் தடுத்த அதிகாரிகளையும் அடித்தார்கள். 

                                    

இது போன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் அதிகாரிகளை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் எங்களுக்குப் பாதுகாப்பு கேட்டு போராட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் போராட்டம் தவறா? தமிழகம் முழுவதும் முறையாகத் தேர்தல் நடத்தவேண்டும். எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அரசு ஊழியர் சங்கம் ஆகியவற்றின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம்'' என்று முடித்துக்கொண்டார்.