வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (06/04/2018)

கடைசி தொடர்பு:18:00 (08/04/2018)

தமிழைப் பயிற்றுமொழியாக்குங்கள்... 80 வயது முதியவர் மெளனவிரதப் போராட்டம்!

தமிழைப் பயிற்றுமொழியாக்குங்கள்... 80 வயது முதியவர் மெளனவிரதப் போராட்டம்!

திருப்பூரைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர், `தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்மொழியில்தான் பாடங்களைப் பயிற்றுவிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி, மெளனவிரதப் போராட்டம் நடத்திவருகிறார்.

முதியவர்

திருப்பூரைச் சேர்ந்த 80 வயது முதியவர் க.இரா.முத்துசாமி. இவர் கடந்த மார்ச் 24-ம் தேதி தன்னுடைய 80-வது பிறந்த தினத்தன்று, தமிழகத்தின் தேசிய மரமாம் பனைமரத்தின் முன் நின்று மனதார சிறிது நேரம் வணங்கினார். அப்போது, ``எம் தமிழ் இனத்தை தாய்போல் வளர்த்து, எம் தமிழ்மொழியை உந்தன் ஓலைச்சுவடிகளால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் காப்பாற்றிய பனைமரமே, உன்னைத் தொழுது என் போராட்டத்தைத் தொடங்குகிறேன்" என்று சூளுரைத்துவிட்டு, ``தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தொடக்கக் கல்வி முதல் உயர்நிலை கல்வி வரை மாணவர்களுக்குத் தமிழ்மொழியில்தான் பாடங்களைக் கற்பிக்க வேண்டும்" என்பதை வலியுறுத்தியும், அதற்காக தன்னுடைய மரணம் நிகழும் வரை தான் மெளனவிரதம் இருக்கப்போவதாகவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். 

``80-களின் காலகட்டத்தில் திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் `டிட்டோனி' முத்து என்றால் வெகுபிரபலம். பள்ளிக்கல்வியை 7-ம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற முத்துசாமி, `டிட்டோனி' என்ற பெயரில் பின்னலாடை நிறுவனம் ஒன்றை நடத்தி, திருப்பூர் பின்னலாடை துறையில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். பின்நாள்களில் இயற்கையின் மீதும், தமிழ்மொழியின் மீதும்கொண்ட தீராக் காதலால், தூய தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்பதை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க தொடங்கினார். 90-களில் தமிழகத்தில் ஆங்காங்கே தாய்த்தமிழ் பள்ளிகள் தொடங்கப்பட்டபோது, தன்னாலான பங்களிப்பைச் செலுத்தி அவர்களுக்கெல்லாம் உறுதுணையாய் இருந்துள்ளார். தமிழை `செம்மொழி' என்று அறிவிக்கவேண்டி, டெல்லியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் கலந்துகொண்டிருக்கிறார் இந்த முத்துசாமி அய்யா.

வள்ளலார் சன்மார்க்க நெறியில் அதிக பற்றுகொண்டவர். வடலூர் சத்திய ஞான சபையில் வள்ளலார் நெறிப்படி ஜோதி வழிபாடு மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களில், தவறாது பங்கெடுத்தவர். பொதுவுடைமை இயக்கத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர். தமிழ்த் தேசிய தலைவர்களான மா.பொ.சி, பழ.நெடுமாறன் போன்றோருடனும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடனும் நெருக்கமான நட்புகொண்டிருந்தவர் முத்துசாமி அய்யா.

மதுவிலக்குப் போராட்டம், கூடங்குளம் அணு உலைப் போராட்டம் உள்பட தமிழ் சார்ந்தும், தமிழக மக்கள் சார்ந்தும் நடைபெறும் எந்த ஒரு போராட்டத்திலும் கலந்துகொள்வதை வழக்கமாகக்கொண்டவர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போதும்கூட, திருப்பூரில்  மாணவர்களுடன் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக இவரது குரலும் ஒலித்தது. தற்போது பள்ளிகளில் அனைத்துப் பாடங்களின் பயிற்றுமொழியாக தமிழே இருக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்து அறவழிப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். 

திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் உள்ள `இயற்கை வாழ்வகம்' என்ற முத்துசாமி அய்யாவின் இல்லத்தில் சென்று அவரைச் சந்தித்தோம். திருவள்ளுவரின் படம் அருகே அமர்ந்துகொண்டு அவர் புத்தகம் வாசித்துக்கொண்டு இருக்க, ஒரு குவளையில் கம்பங்கஞ்சியைக் கொண்டுவந்து நமக்குக் குடிக்கக் கொடுத்துவிட்டு ஆர்வமாய் பேசத் தொடங்கினார் அவரது மனைவி சுப்புலட்சுமி.

``எங்களின் திருமணம் முடிந்த ஆரம்ப காலங்களில், பின்னலாடை தொழில் சார்ந்து மட்டும் இல்லாமல், மக்கள் சார்ந்த போராட்டங்களில் கலந்துகொள்வதிலும் இவர் தீவிரமாய் இயங்கிக்கொண்டிருந்தார். நானும் இவரது ஆர்வத்துக்கு உறுதுணையாய் இருந்தேனே தவிர, என்றைக்கும் முட்டுக்கட்டை போட்டதில்லை. எங்களுக்கு இரண்டு பெண்கள், ஓர் ஆண் என மொத்தம் மூன்று குழந்தைகள். மகன் ஸ்டாலின் மணிக்குமார் 17 வயதிலேயே வாகன விபத்தில் இறந்துவிட்டான். மற்றொரு மகளான அமுதா இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்துபோனாள். இயற்கை ஏனோ எங்களின் இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டது. இப்போது ஒரே மகளான  ஜீவாவும் மட்டும்தான் எங்களுடன் இருக்கிறார். இந்த வீட்டுக்கு எத்தனையோ தலைவர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். நம்மாழ்வார் எல்லாம் சில நாள்கள் இங்கேயே தங்கியிருந்தார். கெளத்தூர் மணி, சீமான் போன்ற பிள்ளைகளும் இங்கு வந்து நீண்ட நேரம் இருந்துவிட்டு செல்வார்கள். இவர் மீது பாசம்கொண்ட மனிதர்களின் வருகையால், இந்த வீடு என்றைக்கும் ஆனந்தமாகவே இருக்கிறது. சமீபத்தில் 80-வது பிறந்த தினம் வருவதற்கு சில நாள்களுக்கு முன்னர், இப்படியான கோரிக்கையை முன்வைத்து தொடர் மெளனவிரதப் போராட்டம் நடத்த விரும்புகிறேன்'' என்று என்னிடம் தெரிவித்தார். எந்தவித தயக்கமோ, யோசனையோ சிறிதும் இல்லாமல், மகிழ்வுடன் ``சரி'' என்றேன். 

``தமிழுக்கான போராட்டம்... நான் வேண்டாமென்று சொல்ல முடியுமா!" சுப்புலட்சுமி அம்மாவின் இந்த உறுதியான வார்த்தைகள், முத்துசாமி அய்யாவுக்கு  உறுதுணையாகவும் உயிரோட்டத்தையும் தருகின்றன.

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்!


டிரெண்டிங் @ விகடன்