இந்தக் கோடையைச் சமாளிக்குமா சென்னை? தலைதூக்கும் தண்ணீர்ப் பிரச்னை! | Will chennai survive this summer with the water in hand

வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (06/04/2018)

கடைசி தொடர்பு:16:55 (06/04/2018)

இந்தக் கோடையைச் சமாளிக்குமா சென்னை? தலைதூக்கும் தண்ணீர்ப் பிரச்னை!

இந்தக் கோடையைச் சமாளிக்குமா சென்னை? தலைதூக்கும் தண்ணீர்ப் பிரச்னை!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நகரமயமாக்கல், பெருகிவரும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தண்ணீரின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், சராசரி அளவு மழை பெய்தாலும், அதைத் தேக்கும் அளவுக்கு நீர்நிலைகள் பராமரிக்கப்படுவதில்லை. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில், தண்ணீர் அளவு மிகவேகமாகக் குறைந்துவருகிறது. இதனால், வரும் கோடைக்காலத்தைச் சமாளிக்க முடியுமா என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது.

தண்ணீர் இல்லாத ஏரி, காஞ்சிபுரம்

நீர்நிலைகள் நிறைந்த மாவட்டம் காஞ்சிபுரம். இங்கு, பாலாறு, வேகவதி, செய்யாறு, ஓங்கூர், கிளியாறு என ஐந்து ஆறுகள் இருக்கின்றன. சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளன. கால்வாய்கள், ஓடைகள், குளம், குட்டை எனப் பல்வேறு நீர்நிலைகள் அதிகம் இருந்தாலும், அவை பெரும்பாலும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருக்கின்றன. 'பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவோம்' என்ற வாக்குறுதியை வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதுவரை அந்த அறிவிப்பு வெற்று அறிவிப்பாகவே இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தை ஒட்டிய வேலூர் மாவட்ட எல்லையில் உள்ள பாலாற்றில், அமைச்சர்கள் ஆசியோடு மணல் கொள்ளை ஜோராக நடைபெற்றுவருகிறது. அதுபோல, இந்திய ரயில்வே சார்பாக, செங்கல்பட்டு அருகே உள்ள  பாலூரில், ‘ரயில் நீர்’ தொழிற்கூடம் செயல்பட்டுவருகிறது. பாலாற்றிலிருந்து தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை எடுக்கிறார்கள். இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர் வேகமாகக் குறைந்துவருகிறது. ஆற்று நீரை சேமிக்கும் திட்டம் எதுவும் தமிழக அரசிடம் இல்லை என்பதால், ஒவ்வொரு பருவமழையின்போதும் பாலாற்று நீர் கடலில் வீணாகக் கலக்கும் நிலைதான் உள்ளது.

ஆற்று நீர் ஒருபுறம் கடலில் வீணாகக் கலந்தாலும், நிலத்தடி நீர் சுரண்டப்படுவது வேதனையின் உச்சம். பாலாற்றிலிருந்து ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மறைமலைநகர் போன்ற பகுதிகளில் இருக்கும் பன்னாட்டு கார் தொழிற்சாலைகளுக்கு பாலாற்று நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. அதுபோல திருப்போரூர் பகுதியில் உள்ள கேளம்பாக்கம், தையூர் போன்ற பகுதிகளில், அதிக அளவில் அடுக்குமாடி குடியிருப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 6 லட்சம் குடியிருப்புகள் புதிதாக வந்திருக்கின்றன. இதனால், அப்பகுதியின் குடிநீர் தேவை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதற்காக, திருப்போரூர் அருகே உள்ள கிராமங்களிலிருந்து சுமார் 20,000 லிட்டர் கொள்ளளவுகொண்ட ராட்சத வாகனங்களில் தினமும் தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது. ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் இந்த ஒப்பந்தத்தை எடுத்துள்ளார்கள். இதனால், இப்பகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் நாளுக்குநாள் உள்ளே சென்றுகொண்டிருக்கிறது. திருப்போரூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலங்களில் ஆழ்துளையிட்டு தண்ணீர் எடுக்கப்படுவதால், வனவிலங்குகள் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் நீர் ஆதாரத்தை உருவாக்கவேண்டிய அரசே, செயற்கையாக தண்ணீர் பஞ்சத்தை உருவாக்குவதுதான் வேதனையின் உச்சம்!

பாலாறு தண்ணீர் வறட்சி, காஞ்சிபுரம்

கடந்த 2015-ம் ஆண்டு  பெய்த பருவமழையால், சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகள் அதிக அளவு பாதித்தன. நீர்நிலைகளைப் பராமரிக்கத் தவறியதும், ஆக்கிரமிப்பு செய்ததும்தான் அந்த வெள்ளத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. அடுத்த வருடமே பருவமழை பொய்த்துப்போனது. இதனால் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக, தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடியது. குறிப்பாக, சென்னையில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தால், மக்கள் காலிக் குடங்களோடு வீதிக்கு வந்து போராடினார்கள். இதனால், கல்குவாரிகளிலிருந்து தண்ணீர் கொண்டுசெல்லப்பட்ட அவலம் நேர்ந்தது.

கடந்த 2017 ஜூலையில் இருந்து தென்மேற்குப் பருவமழை வடமாவட்டங்களில் போதுமான அளவில் பெய்தது. இதன் காரணமாக தண்ணீர்ப் பஞ்சம் ஓரளவு குறைந்தது. அதைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழையும் வழக்கமான அளவில் பெய்தது. இதனால், ஜூலையில் இருந்து டிசம்பர் வரை நிலத்தடி நீர் ஏறுமுகமாகவே இருந்தது. 5.77 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக நிலத்தடி நீர் வேகமாக உள்ளே சென்றுகொண்டிருக்கிறது. இதனால், இந்த வருடமும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்குநாள் வெகுவாகக் குறைந்துவருகிறது. ஜனவரியில் 1.95 மீட்டர் தோண்டினாலே நிலத்தடி நீர் கிடைத்தது. ஆனால், ஜனவரியில் 0.50 மீட்டா், பிப்ரவரியில் 0.55 மீட்டா், மார்ச்சில் 0.33 மீட்டர் என உயர்ந்து மார்ச் மாதத்தில் அந்த அளவு 2.83 மீட்டராக அதிகரித்திருக்கிறது. அடுத்த சில மாதங்களில், நிலத்தடி நீர் இன்னும் உள்ளே சென்றுவிடும் என்பதால், தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும்நிலை உள்ளது.

குடிநீர்

காவிரி உரிமைக்காக மத்திய அரசை எதிர்த்துப் போராடும் மக்கள், குடிநீருக்காக மாநில அரசை எதிர்த்துப் போராடும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் போராட்டம் வெடிக்கும் முன், அரசும் அதிகாரிகளும் இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்