வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (06/04/2018)

கடைசி தொடர்பு:13:06 (17/04/2018)

ஏ.டி.ஜி.பி. மகள் வீடியோ சர்ச்சை கான்ஸ்டபிள் கார்த்திகேயன் இப்போது என்ன செய்கிறார்? #VikatanExclusive

ஏ,டி.ஜி.பியின் மகள்

ஏ.டி.ஜி.பி. மகளுக்கும் கான்ஸ்டபிள் கார்த்திகேயனுக்கும் நடந்த வாக்குவாத வீடியோ காவல்துறையைக் கலங்கடித்தது. தற்போது கான்ஸ்டபிள் கார்த்திகேயன் எப்படியிருக்கிறார் என்று விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

சென்னைப் பாலவாக்கம் கடற்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏ.டி.ஜி.பியின் மகள் மற்றும் அவருடன் காரில் வந்தவர்கள், கான்ஸ்டபிள் கார்த்திகேயனுடன் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியானது. இந்த வீடியோ குறித்து சென்னை மாநகர போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணை வளையத்தில் கான்ஸ்டபிள் கார்த்திகேயன் இருந்துவருகிறார். தற்போது, அவருக்கு வேறு இடத்தில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நீலாங்கரை காவல் நிலையத்தில் காவல் உயரதிகாரிகளின் வாக்கி டாக்கிகள் அலறின. இதனால், நீலாங்கரை காவல்நிலையமே களேபரமானது. உயரதிகாரிகளின் கேள்விக்கு பதில் சொல்லியே சோர்வாகினர் சில அதிகாரிகள். 
 வீடியோ சம்பவத்துக்குப் பிறகு கான்ஸ்டபிள் கார்த்திகேயன் எப்படியிருக்கிறார் என்பதை அறிய அவரது சக காவல் நண்பர்களிடம் பேசினோம். 

 ``விழுப்புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். கடந்த 10 ஆண்டுகளாகக் காவல் துறையில் பணியாற்றிவருகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவர், காவல் வேலைக்கு விருப்பப்பட்டே வந்தார். சென்னையில் பல காவல் நிலையங்களில் பணியாற்றிய அவர், கண்ணகி நகர் காவல் நிலையத்திலிருந்து கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு நீலாங்கரைக்கு இடமாற்றப்பட்டார். கொட்டிவாக்கம் பீட் பணி அவருக்கு வழங்கப்பட்டது. அந்தப் பணியிலும் சிறப்பாகப் பணியாற்றினார். எதையும் துணிச்சலாகவும் நேர்மையாகவும் செய்வதே அவருக்குப் பல இடங்களில் பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது. 
  
 ஏப்ரல் 2 அன்று, தான் ஏ.டி.ஜி.பி. மகள் என்று ஒரு பெண் கார்த்திகேயனை மிரட்டும் வீடியோ வெளியானது. அதைப் பார்த்ததும் என்ன நடந்தது என்று அவரிடம் விசாரித்தோம். சம்பவத்தன்று இரவு சொகுசு காரில் நான்கு பேர் பாலவாக்கம் கடற்கரையில் நீண்ட நேரம் இருந்துள்ளனர். இருட்டான அந்தப் பகுதியில் கார் வெகுநேரம் நிற்பதைப் பார்த்த கார்த்திகேயன், அங்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது காரிலிருந்து இறங்கிய ஆண் ஒருவர், `காரில் இருப்பது டி.ஜி.பி.யின் மகள்’ என்று கார்த்திகேயனிடம் அதட்டல் தொனியில் கூறியுள்ளார். அடுத்து வந்த பெண் ஒருவர், `ஐ கால் டு மை டாடி’ என்று சொல்லியதோடு, ஏ.டி.ஜி.பி. தரப்பைச் சேர்ந்த ஒருவருக்கு போன் போட்டுள்ளார். அதில், கார்த்திகேயனிடம் பேசியவர், `நீ வேலை பார்க்க வேண்டுமா இல்லையா... ஒழுங்கா நடந்துக்க.. நாங்கள்லாம் பெரிய இடம்.. எங்ககிட்ட மோதின... அவ்வளவுதான். நாளைக்கு கமிஷ்னரிடமிருந்து உனக்கு டிஸ்மிஸ் ஆர்டர் வரும்’ என்று  மிரட்டியுள்ளார்.

அதன்பிறகே கார்த்திகேயன் தன்னுடைய செல்போனில் நடந்த சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளார். அந்தப் பதிவை அழிக்கச்சொல்லி ஏ.டி.ஜி.பி. தரப்பில் மிரட்டல்கள் வந்துள்ளன. அப்போது, அழித்துவிட்டதாகத் தெரிவித்த கார்த்திகேயன், அங்கிருந்து கிளம்பிவந்து நடந்த  சம்பவத்தை காவல் நிலையத்தில் சிலரிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், உயரதிகாரியின் குடும்பத்தினரிடம் கார்த்திகேயன்  நடந்துகொண்ட விதம் தவறு என்று சொல்லி அவர் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு நடந்தது. இதனால்தான் தன்தரப்பு நியாயத்தை எல்லோரும் தெரிந்துகொள்ளவே அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார். தற்போது, வீடியோவை எப்படிச் சமூக வலைதளத்தில் வெளியிடலாம் என்று விசாரணை அதிகாரிகள் அவரைத் துளைத்தெடுக்கின்றனர். இந்த வீடியோ மட்டும் வெளிவரவில்லை என்றால் கார்த்திகேயன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். வீடியோ வெளியானதால் அவர் மீது தற்போதைக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

 இதற்கிடையில், கார்த்திகேயனின் கடந்த கால சர்வீஸ் குறித்து முழுவிவரங்களுடன் ஃபைல் உயரதிகாரிகளின் டேபிளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதைக் கொண்டு நடவடிக்கை எடுக்கலாமா என்ற ஆலோசனை நடந்துவருகிறது. எங்களிடம் கார்த்திகேயன் எப்படியும் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உயரதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மோதிய காவல்துறையின் கீழ்மட்ட காவலர்களுக்கு ஏற்பட்ட நிலைமைதான் எனக்கும் நேரிடும். அப்போது நிச்சயம், நீதிமன்றம், மக்கள் முன்னால் என்தரப்பு நியாயத்தை தெரிவிப்பேன்’ என்று தெரிவித்தார். அவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறோம். நேற்று மெரினா கடற்கரையில் பணிக்காகக் கார்த்திகேயன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர், காயமடைந்துள்ளார். வீடியோ சம்பவத்துக்குப் பிறகு கார்த்திகேயன், காவல்துறையின் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளார்" என்றனர். 

திருச்சியில் உஷா என்ற இளம்பெண்ணை எட்டி உதைத்த சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்பெக்டர் காமராஜ், கைது செய்யப்பட்டார். அதன்பிறகு தமிழகக் காவல்துறை, வாகனச் சோதனையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தது. அதற்கான உத்தரவு வாய்மொழியாகப் பிறப்பிக்கப்பட்டது. சென்னைப் பாலவாக்கத்தில் ஏ.டி.ஜி.பி. மகள் வீடியோ விவகாரத்துக்குப் பிறகு சென்னை போலீஸாருக்குப் புது உத்தரவு வாய்மொழியாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபடலாம். ஆனால், உதவி ஆய்வாளர் இருந்தால் மட்டுமே காருக்குள் சோதனையிடலாம் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

 காவல்துறையில் காலங்காலமாக உயரதிகாரிகளுக்கு ஒரு நியாயம்... கீழ்மட்ட காவலர்களுக்கு ஒரு நியாயம் என்ற எழுதப்படாதச் சட்டம் இருந்துவருகிறது. அதில், கார்த்திகேயன் விதிவிலக்கா என்று முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்!


டிரெண்டிங் @ விகடன்