வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (06/04/2018)

கடைசி தொடர்பு:15:31 (06/04/2018)

விளம்பரத்தை அழித்த இளைஞர்கள்! - ஐ.பி.எல் போட்டிகளுக்கு தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு

காவிரி மேலாண்மை வாரியத்துக்காகத் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்தும் வரும் நிலையில், 'ஐபிஎல் போட்டிகள் நடைபெறக் கூடாது' என்ற குரல்களும் ஆங்காங்கே கேட்கத் தொடங்கிவிட்டது. 

ஐபிஎல்

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்குகின்றன. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சென்னை அணி இந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இருப்பதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். நாளை துவங்க உள்ள போட்டிகளைக் காண, சென்ற வாரத்திலிருந்தே ரசிகர்கள் ஆயத்தமாகிவிட்டனர். இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், ஸ்டெர்லைட் எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு போன்ற போராட்டங்களும் ஆங்காங்கே நடந்தவண்ணம் உள்ளன.

ஐபிஎல்

தமிழ்நாடு போராட்டக் களமாகியுள்ள நிலையில், 'சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது' எனப் பல அரசியல் தலைவர்களும் பிரபலங்களும், மக்களும் தெரிவித்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சென்னையில் சிஎஸ்கே அணி வீரர்களை வரவேற்கும் விதமாகச் சுவர்களில் வரையப்பட்டிருந்த ஓவியத்தை சிலர் மாற்றிக்கொண்டிருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஓவியத்தில் உள்ள சென்னை அணிக்கு, 'விசில் போடு' என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தை அழித்துவிட்டு  ‘காவிரி வேண்டும், விவசாயி, We need Cauvery, Dont Want IPL’ போன்ற வாசகங்களை மாற்றி எழுதியுள்ளனர்.