சென்னை போக்குவரத்து போலீஸாருடன் மல்லுக்கட்டிய பிரகாஷ், ஜாமீனில் வெளியில் வந்தார் |

வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (06/04/2018)

கடைசி தொடர்பு:16:54 (06/04/2018)

`என் மகன் தூங்கமுடியாமல் தவித்தான்' - போலீஸாருடன் போராடிய பிரகாஷின் தாய் சங்கீதா கண்ணீர் பேட்டி

பிரகாஷ்- தாயார் சங்கீதா

'இரவில் தூங்க முடியாமல் என் மகன் பிரகாஷ் தவித்தான்' என்று அவரது தாய் சங்கீதா கண்ணீர்மல்க நம்மிடம் தெரிவித்தார். 

தி.நகரில் போக்குவரத்து போலீஸாருடன் மல்லுக்கட்டிய பிரகாஷ், நேற்று மாலை ஜாமீனில் வெளியில் வந்தார். வீட்டுக்குச் சென்ற அவரை கட்டித்தழுவி கன்னங்களில் முத்தங்களைப் பதித்தார் அவரது அம்மா சங்கீதா. மகனைப் பார்த்த மகிழ்ச்சியில் இருந்த சங்கீதா, நம்மிடம் பேசினார். 

"முதலில் பத்திரிகை, மீடியாக்களுக்கு நன்றி சொல்லுகிறேன். நானும் என் குடும்பமும் உயிரோடு இருப்பதற்கு நீங்கள்தான் காரணம்'' என்றவர், பிரகாஷை தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு பேசத் தொடங்கினார். 

''வீட்டுக்கு என் மகன் வந்ததும், 'அம்மா இனிமேல் நான் குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள்' என்று என்னிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான். சிறையில் இருந்தவர்கள், தன்னிடம் அன்பாகப் பழகியதாகவும் தெரிவித்தான். என்ன நடந்தது என்று ஆர்வமாக அவர்கள் பிரகாஷிடம் கேட்டுள்ளனர்.  சம்பவத்தன்று, போலீஸார் மட்டும் அப்படி நடக்காமல் இருந்திருந்தால், இந்த நிலைமை எங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்காது. என்னை போலீஸார் தாக்கியதால்தான் பிரகாஷுக்கு கோபம் வந்துவிட்டது. அந்தக் கோபத்தை இனி நான் கட்டுப்படுத்திக்கொள்கிறேன்' என்று என்னிடம் தெரிவித்தான். நானும் அவனுக்கு சில அறிவுரைகளைச் சொல்லியுள்ளேன். இனி கவனமாக நடந்துகொள், உன்னை நம்பித்தான் நானும் உன் தங்கச்சியும் இருக்கிறோம் என்று கூறினேன்.

காலையில் மாம்பலம் போலீஸ் நிலையத்துக்குச் சென்று கையெழுத்துபோட்டுவிட்டு வீட்டுக்கு வந்தான். வீட்டிலேயே இருந்தால் தி.நகர் சம்பவமே நினைவுக்கு வரும்.  அதனால், டிபன் சாப்பிட்டுவிட்டு, தேனாம்பேட்டைக்கு வேலைக்குக் கிளம்பிட்டான். அவனை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம்.  பிரகாஷின் கையை போலீஸார் முறுக்கியதில், அவனுக்கு இன்னமும் வலி இருக்கிறது. முதுகிலும் வலிப்பதாகத் தெரிவித்தான். அதனால், இரவில் தூங்கமுடியாமல் அழுதான். அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல உள்ளேன்" என்றார் கண்ணீருடன். 

பிரகாஷின் சித்தப்பா செந்தில் கூறுகையில், "பிரகாஷ் ரொம்பவே நல்ல பையன். என்னுடைய அண்ணன் முனுசாமி இறந்ததும், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குடும்பப் பாரத்தை தனி ஆளா சுமந்துகொண்டு வருகிறான்.  அம்மா மேல அவனுக்கு அளவுகடந்த பாசம். அண்ணியை போலீஸார் தாக்கியதைப் பொறுக்க முடியாமல்தான், போலீஸாரின் சட்டையைப் பிடித்துவிட்டான். ஹெல்மெட் போடாததற்கு அபராதம் செலுத்தக்கூட அவன் தயாராகத்தான் இருந்தான். ஆனால், அதற்குள் எல்லாம் கைமீறி நடந்துவிட்டது. நீதிமன்றத்தில் அவனுக்கு ஜாமீன் கிடைக்கவிடாமல் போலீஸார் பலவகையில் முட்டுக்கட்டை போட்டனர். ஆனால், அதையும் மீறி ஜாமீன் கிடைத்துவிட்டது. எங்கள் தரப்பு விளக்கத்தை  மாநில மனித உரிமை ஆணையத்திடம் கொடுத்திருக்கிறோம். நிச்சயம் நியாயம் கிடைக்கும்" என்றார்.