`சிறந்த கல்வியாளர் சூரப்பா' - அமைச்சர் கடம்பூர் ராஜு சர்ட்டிஃபிகேட் #AnnaUniversity

”இந்தியாவில் சிறந்துவிளங்கும் கல்வியாளர்கள் பல மாநிலங்களில் நியமிக்கப்படுவது வழக்கம். அதுபோலத்தான் அண்ணா பல்கலைக்கழகத்திலும் சூரப்பாவை துணை வேந்தராக ஆளுநர் நியமனம் செய்துள்ளார்.” என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

``இந்தியாவில் சிறந்து விளங்கும் கல்வியாளர்கள், பல மாநிலங்களில் நியமிக்கப்படுவது வழக்கம். அதுபோலத்தான், அண்ணா பல்கலைக்கழகத்திலும் சூரப்பாவைத் துணைவேந்தராக ஆளுநர் நியமனம் செய்துள்ளார்” என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜு

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் நேரடியாக அழுத்தம்கொடுத்தார். மேலும், சட்டமன்றத்தில் சிறப்புக் கவனஈர்ப்புத் தீர்மானம், மத்திய அரசுமீது அவமதிப்பு வழக்கு எனத் தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. இதுதவிர, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி, அ.தி.மு.க-வினர்  தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

தி.மு.க தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டங்களால், தி.மு.க-வுக்கு வெற்றி எதுவும் இல்லை. உரிமையை மீட்டெடுக்கத் தமிழர்கள் நடத்திய போராட்டங்களுக்கான வெற்றி மட்டும்தான். முந்தைய காலங்களில் தமிழர்கள் நடத்திய போராட்டங்களில், இதுவும் ஒன்று. ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருப்பதாக நாடகமாடிய தி.மு.க-வினருக்கு, அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் நாடகமாகத்தான் தெரியும். இதில், தி.மு.க-வின் உண்ணாவிரதத்துக்குப் பிறகுதான் கொத்துக்கொத்தாக குண்டுகள் அள்ளி வீசப்பட்டு, ஈழத்தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். இந்த பச்சைத் துரோகத்துக்கு தி.மு.க-வும் காரணம். காவிரி மேலாண்மை விவகாரத்தில் தமிழகத்தில் தமிழர்கள் தங்கள் உணர்வுகளைக் காட்டிவருவதுபோல, கர்நாடக மாநில மக்களும் அவர்களது உணர்வைக் காட்டுவார்கள்.  

கமிட்டியின் அடிப்படையில் துணைவேந்தர் நியமனம் என்பது ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இந்த அதிகாரத்தை மத்திய அரசு ஆளுநருக்கு அளித்துள்ளது. இந்தியாவில் சிறந்துவிளங்கும் கல்வியாளர்கள், பல மாநிலங்களில் நியமிக்கப்படுவது வழக்கம். அதுபோலத்தான், அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஆளுநரால் துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு தகுதியின் அடிப்படையில், இதற்கு முன்பாகவும் நியமிக்கப்பட்ட உதாரணங்கள் உள்ளன. அதேபோல,  தமிழகத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்தவர்கள் பல்வேறு மாநிலங்களில் ஆளுநராகவும், பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் பணியாற்றிவருகின்றனர். இது, தொடர்ந்து நடைபெறும் வழக்கமான நடைமுறைதான். முந்தைய தி.மு.க ஆட்சிக் காலத்திலும் இப்படிப்பட்ட நடைமுறைகள் நடந்துள்ளன” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!