வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (06/04/2018)

கடைசி தொடர்பு:18:06 (06/04/2018)

`வாட்டர் பிளான்ட்டால் குடிக்கத் தண்ணீரில்லை!' - கலெக்டரிடம் முறையிட்ட கிராம மக்கள்

குடிதண்ணீர் பிரச்னை

''வாட்டர் பிளான்ட்டால் கிராமத்துக்கு குடிதண்ணீர் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. எனவே, அந்த பிளான்ட்டை மூட வேண்டும்'' என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் லதாவிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து அந்தக் கிராம மக்களிடம் பேசும்போது, சிவகங்கை மாவட்டம், அழகமாநகரி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம், அழ.உசிலம்பட்டி. இந்தக் கிராமத்தில், இரண்டு மேல்நிலை நீர்த் தொட்டியும், 1000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி ஐந்தும் இருக்கின்றன. இந்நிலையில், மேல்நிலை நீர்த் தொட்டிக்கு அருகில், சிவஞானம் என்பவர் சிவா வாட்டர் சப்ளை கம்பெனி நடத்திவருகிறார். இங்கிருந்து, தினந்தோறும் குறைந்தது 50,000 லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, லாரிகளில் விற்பனைசெய்யப்பட்டுவருகிறது. மேலும், குடிக்கத் தண்ணீர் இன்றி கிராம மக்கள் சிரமப்பட்டுவருகிறோம். ஏற்கெனவே, மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழியிடம் இந்த வாட்டர் பிளான்ட் பற்றி அளித்த புகாரின் பேரில், நடவடிக்கை எடுக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

தற்போது, சிவா தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிகாரிகள் உடந்தையோடு மீண்டும் வாட்டர் பிளான்ட்டை திறந்திருக்கிறார். தற்போது இருக்கும் கடுமையான வறட்சியில் ,தண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டுவருகிறோம். ஊரில் அமைந்துள்ள இரண்டு பம்ப் இரண்டும், சின்டெக்ஸ் 3-ம் பழுதடைந்துவிட்டன. இதையெல்லாம் சரிசெய்துகொடுக்க மறுத்துவருகிறார், ஊராட்சி எழுத்தரான கலைச்செல்வி. மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, எங்கள் குடிதண்ணீர்ப் பிரச்னைக்கு முடிவுகட்டி, தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் லதாவிடம் புகார் கொடுத்திருக்கிறோம்'' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க