வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (06/04/2018)

கடைசி தொடர்பு:17:24 (06/04/2018)

``காவிரி கைவிட்டுப் போனதற்குக் காரணமே கருணாநிதிதான்!'' - புலவர் புலமைப்பித்தன்

``காவிரி கைவிட்டுப் போனதற்குக் காரணமே கருணாநிதிதான்!'' - புலவர் புலமைப்பித்தன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம், கடையடைப்பு, பேரணி, ரயில் மறியல் எனத் தமிழகம் முழுக்க மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், 'காவிரிப் பிரச்னைக்கு யார் காரணம்' என்ற தலைப்பில், ஆளும் கட்சியான அ.தி.மு.க-வும் எதிர்க்கட்சியான தி.மு.க-வும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறது. 

''தி.மு.க தலைவர் கருணாநிதி, 1974-ம் ஆண்டு காவிரி ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தவறியதுதான் இவ்வளவுப் பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம்'' என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையில், தி.மு.க முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன், ''மத்திய பி.ஜே.பி அரசுக்கும் கர்நாடக மாநில பி.ஜே.பி-க்கும் விசுவாசம் காட்டும் நோக்கில், உண்மை வரலாறுகளைத் திரித்தும் பழித்தும் பேசிவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி'' என்று தி.மு.க மீதான குற்றச்சாட்டுகளை ஒட்டுமொத்தமாக மறுத்துள்ளார். 

உண்மையில், இவ்விவகாரத்தில் யார்மீது தவறு?

அ.தி.மு.க ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்திலிருந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர், எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர், கட்சியின் அவைத்தலைவர் எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மூத்தத் தலைவரான புலவர் புலமைப்பித்தன் வசம் நமது சந்தேகங்களை கேள்விகளாக முன்வைத்தோம்....

புலவர் புலமைப்பித்தன்1924-ல் போடப்பட்ட காவிரி ஒப்பந்தம் 1974-ல் காலாவதியாகவில்லை என்கிறாரே துரைமுருகன்?

''1924-ல் காவிரி நீருக்காகப் போடப்பட்ட ஒப்பந்தம் 50 ஆண்டுகாலம் மட்டுமே செல்லுபடியாகும் என்று அந்த ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அந்த ஒப்பந்தமானது 1974-லேயே முடிவுற்றுவிட்டது. மீண்டும் காவிரி ஒப்பந்தத்துக்காக அன்றைக்கே நீதிமன்ற வழக்கு தொடுத்திருக்க வேண்டியது அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க முதலமைச்சர் கருணாநிதிதான். ஆனால், அவர் வழக்கு தொடுக்கவில்லை. அதற்குக் காரணம்... அன்றைக்கு மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் பிரதமர் இந்திராகாந்தி, 'காவிரிக்காக வழக்கு எதுவும் தொடுக்க வேண்டாம்' எனக் கருணாநிதியை நிர்ப்பந்தித்தார். அந்த நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து கருணாநிதியும் வழக்கு தொடுக்காமல் விட்டதே காவிரிப் பிரச்னை இந்தளவு வீரியமாகிப்போனதற்கான அடிப்படைக் காரணம்!''

1924-ம் ஆண்டு போடப்பட்ட காவிரி ஒப்பந்தம் இப்போதும் செல்லும் என்று காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதே..?

''அது தவறானது. 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்திலேயே, 'இது 50 ஆண்டுகாலத்துக்கு நீடிக்கும். அதன் பின்னர் அன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, 1974-ம் ஆண்டிலேயே கருணாநிதி, காவிரிக்காக வழக்கு தொடுத்திருந்தார் என்றால், இன்றைக்குப் பாதுகாப்பாக இருந்திருக்கும். ஆனால், அன்றைக்கு அவர் பிரதமர் இந்திரா காந்தியின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால், வழக்கு தொடுக்காமல் இருந்துவிட்டார்.''

இந்திராகாந்தியின் நிர்ப்பந்தத்துக்கு கருணாநிதி அடிபணிய வேண்டிய அவசியம் என்ன?

''எல்லாமே அரசியல்தான். ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் உத்தியிலேயே அன்றைக்கு இந்திரா காந்தியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொண்டார் கருணாநிதி. அதுமட்டுமல்ல... அன்றைக்கு கச்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்குத் தாரை வார்த்தபோதும் கருணாநிதி எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருந்துவிட்டார். அன்றைய சட்டசபையில் இதுகுறித்த கேள்விக்குப் பதில் அளித்த கருணாநிதி, 'நான் வேண்டாமென்று சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை. நான் என்ன செய்ய முடியும?' என்று பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் விதமாகத்தான் பேசினார்.''

இந்திராகாந்தி - கருணாநிதி

1976-ம் ஆண்டில்தான் சர்க்காரியா கமிஷனே அமைக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால், 1974-ம் ஆண்டிலேயே மத்திய அரசின் நிர்ப்பந்தத்துக்கு கருணாநிதி அடிபணிந்தார் என்று சொல்வது முரண் அல்லவா?

''அப்படியல்ல... கருணாநிதி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கான சர்க்காரியா விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது 1976-ம் ஆண்டு. ஆனால், அவரது ஊழல்கள் அதற்கு முன்னதாகவே வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டன. அதனால்தான் மத்திய காங்கிரஸ் அரசின் சொல்லுக்கு அவர் கட்டுப்பட்டு நடக்க வேண்டியதாகிவிட்டது.''

இந்திரா காந்தி தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசும்கூட கர்நாடகத்துக்கு சாதகமாகவும் தமிழகத்துக்கு பாதகமாகவும் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன?

''காரணம்... தமிழகத்தில் வேரூன்றியிருந்த திராவிடக் கட்சிகள்தான். இங்கே காங்கிரஸ் கட்சி பலமிழந்த நிலையில் இருந்தது. அதனால், தனது கட்சி பலமாக உள்ள கர்நாடக மாநிலத்துக்கு சாதகமாக இந்திரா காந்தி நடந்துகொண்டார்.
இந்த நிலைமைதான் இன்றைக்கு வரையிலும் தொடர்கிறது. தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறபோது, காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை காங்கிரஸ் - பி.ஜே.பி உள்ளிட்ட எந்தத் தேசியக் கட்சியும் எடுக்கத் துணியாது என்பதுதான் உண்மை!''


டிரெண்டிங் @ விகடன்