`நகைக்காக என் காதல் மனைவியைக் கொன்னுட்டாங்களே' - கண்ணீர்விட்ட பிரியாவின் கணவர் | Vadapalani murder - Victim's husband explains the scenario

வெளியிடப்பட்ட நேரம்: 16:43 (06/04/2018)

கடைசி தொடர்பு:16:58 (06/04/2018)

`நகைக்காக என் காதல் மனைவியைக் கொன்னுட்டாங்களே' - கண்ணீர்விட்ட பிரியாவின் கணவர்

கொலை


வடபழனியில் கொலை செய்யப்பட்ட பிரியாவின் கணவர் பாலகணேஷ் என்ற பிரபு திடுக்கிடும் தகவலை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது, நகைக்காக என் காதல் மனைவியை இழந்துவிட்டேனே என்று மருத்துவமனையில் கதறியழுதுள்ளார். 

சென்னை வடபழனி, தெற்கு சிவன்கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருபவர் பாலகணேஷ் என்ற பிரபு. இவர் வடபழனியில் உள்ள சிவன் கோயிலில் தற்காலிக அர்ச்சகராகப் பணியாற்றுகிறார். இவரது சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலூர். இவர், வேலூர் மாவட்டம் நெமிலியைச் சேர்ந்த பிரியா என்ற ஞானபிரியாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக்கு குழந்தை இல்லை. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.

சம்பவத்தன்றுகூட இருவரும் மருத்துவமனைக்குச் சென்றனர். கணவன், மனைவி இரவில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டப்படும் சத்தம்கேட்டு பிரபு, கதவைத் திறந்துள்ளார். வெளியில் நின்றவர்கள், பிரபுவை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். அவரது அலறல் சத்தம்கேட்டு பிரியா அங்கு வந்தார். அவரின் கை, கால்களைக்  கட்டிய மர்மநபர்கள், நகைகளைக் கொள்ளையடித்தனர். பிறகு, பிரியாவையும் கொலை செய்துவிட்டு தப்பினர். அதற்கு முன்பு பிரபுவின் கை, கால்களைக்  கட்டி கழிவறையில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். 

 இதுகுறித்து வடபழனி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். ஆனால், பிரபுவின் வீட்டுக்கு யாரும் செல்லும் காட்சிகள் பதிவாகவில்லை. இது. போலீஸ் விசாரணையில் தொய்வை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பிரபு, பிரியாவுக்கு தெரிந்தவர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

 இதற்கிடையில் மயங்கிய நிலையிலிருந்த பிரபுவை அரசு மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மயக்கத்திலிருந்து தெளிந்த பிரபு, போலீஸாரிடம் என் மனைவி எப்படி இருக்கிறார் என்று கேட்டுள்ளார். அவரிடம், பிரியா கொலை செய்யப்பட்ட தகவலை போலீஸார் தெரிவித்தனர். அதைக் கேட்ட பிரபு, நகைக்காக என் காதல் மனைவியைக் கொன்னுட்டாங்களே என்று கதறியுள்ளார். அவருக்கு போலீஸார் ஆறுதல் சொல்லியுள்ளனர். 

 கொலை

இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிரியாவின் கொலையில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எங்களின் சந்தேகங்கள் குறித்து பிரபுவிடம் விசாரணை நடத்தினோம். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். 
சம்பவத்தன்று பிரபு கதவைத் திறந்ததாகவும் இரும்புக் கம்பியால் அடித்தது மட்டும் நினைவில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதன்பிறகு என்ன நடந்தது என்று எங்களிடமே பிரபு கேட்கிறார். இதனால், இந்த வழக்கை வேறு கோணத்தில் விசாரித்துவருகிறோம். 

 பிரியாவின் கழுத்தில் கிடந்த செயின் மட்டும் பறிக்கப்பட்டுள்ளது. இதுதான் எங்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் நகைக்காகக் கொலை செய்து கொள்ளையடிக்கும் பழைய குற்றவாளிகளின் பட்டியலைச் சேகரித்து விசாரித்துவருகிறோம். 
இதற்கிடையில் பிரேத பரிசோதனை முடிந்து பிரியாவின் உடல், அவரின் உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது. அவரது உடல் வேலூரில் உள்ள நெமிலிக்கு இன்று கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலி நடக்கிறது. இதன் பிறகு, பிரியாவின் கணவர் பிரபுவிடம் மீண்டும் விசாரிக்க முடிவுசெய்துள்ளோம். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். அந்தக் கோணத்திலும் எங்கள் விசாரணை நடந்துவருகிறது. கொலை நடந்த இடத்தில் எங்களுக்கு முக்கியத் தடயம் ஒன்று கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. அதில் முன்னேற்றம் ஏற்பட்டால் விரைவில் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்" என்றார்.