குமரியில் நாளை பா.ஜ.க நடத்த இருந்த பந்த் திடீர் வாபஸ்! | BJP withdraws Bandh at kanniyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (06/04/2018)

கடைசி தொடர்பு:19:30 (06/04/2018)

குமரியில் நாளை பா.ஜ.க நடத்த இருந்த பந்த் திடீர் வாபஸ்!

கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாக நாளை அறிவிக்கப்பட்ட பந்த் போராட்டத்தை பா.ஜ.க. வாபஸ் பெற்றுள்ளது. துறைமுக எதிர்ப்புக்குழு போராட்டமும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ன்னியாகுமரி வர்த்தகத் துறைமுகத்துக்கு ஆதரவாக நாளை அறிவிக்கப்பட்ட பந்த் போராட்டத்தை, பா.ஜ.க வாபஸ்பெற்றுள்ளது. துறைமுக எதிர்ப்புக்குழு போராட்டமும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில், வர்த்தகத் துறைமுகம் அமைக்க ஆதரவு மற்றும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில், நாளை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு, கன்னியாகுமரி பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பா.ஜ.க நாளை பந்த் அறிவித்திருந்தது. இந்த நிலையில், துறைமுகத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, பா.ஜ.க சார்பில் அறிவிக்கப்பட்ட பந்த் வாபஸ்பெறப்பட்டது.

பாஜக

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தலைவர் முத்துகிருஷ்ணன் கூறுகையில், கன்னியாகுமரி வர்த்தகத் துறைமுகத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட வளர்ச்சியை விரும்பாத சக்திகள், நாளை எதிர்ப்புப் போராட்டம் நடத்துவதாக இருந்தது. துறைமுகத்துக்கு ஆதரவாக பா.ஜ.க சார்பில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில், முழு அடைப்புப் போராட்டத்தை பா.ஜ.க வாபஸ்பெறுகிறது. ஜெகத்கஸ்பார், உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பா.ஜ.க தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கிறோம். எதிர்ப்பாளர்கள் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாலும், துறைமுகம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி கூறப்பட்டதாலும், போராட்டம் தற்காலிகமாக வாபஸ்பெறப்படுகிறது" என்றார்.

எதிர்ப்புக்குழு

இது ஒருபுறம் இருக்க, வர்த்தகத் துறைமுகத்துக்கு எதிராக நாகர்கோவிலில் நடக்க இருந்த போராட்டத்தை, கன்னியாகுமரி பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் இடம் மாற்றியுள்ளது. துறைமுகத்துக்காக இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ள கோவளம் முதல் கீழ மணக்குடி வரையிலான பகுதிகளில் போராட்டம் நடத்துவதென, எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி கூறுகையில், "கன்னியாகுமரி வர்த்தகத் துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. அதற்குப் பதிலாக, கன்னியாகுமரி முதல் கீழமணக்குடி வரையிலான கடல் பகுதியில் கடல் முற்றுகை போராட்டம் காலை 10 மணி முதல் நடக்கிறது" என்றார்.