வெளியிடப்பட்ட நேரம்: 17:01 (06/04/2018)

கடைசி தொடர்பு:17:04 (06/04/2018)

தபால் நிலையத்தை இழுத்துப் பூட்டிய ஜான் பாண்டியன்! #WeWantCMB

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரான ஜான் பாண்டியன், தபால் நிலையத்துக்குப் பூட்டுப் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரான ஜான் பாண்டியன், தபால் நிலையத்துக்குப் பூட்டுப் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஜான் பாண்டியன்  போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தித் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சியினரும் இதே கோரிக்கைக்காகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் காவிரி விவகாரம் உச்சகட்டத்தில் இருக்கும் சூழலில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரத்தில் உள்ள தபால் நிலையத்தின் முன்பாகப் போராட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர், த.ம.மு.க தலைவரான ஜான் பாண்டியன் தலைமையில் தொண்டர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டுப் பூட்டுப் போட முயன்றனர். அப்போது அங்கு இருந்த அவரின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் தபால் நிலைய அலுவலகத்தின் கேட்டுக்குப் பூட்டுப் போட்டார். அவரையும் அவருடன் வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட தொண்டர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

தபால் நிலையத்துக்கு பூட்டு - கைது

இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரத்துக்குப் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட ஜான் பாண்டியன் கூறுகையில், ‘காவிரி விவகாரத்தில் நமது உரிமையை நிலைநாட்ட வேண்டியது அவசியம். அதற்காக அனைத்துத் தரப்பு மக்களும் வீதிக்கு வந்து போராட வேண்டும். காவிரி விவகாரத்தில் உரியத் தீர்வு கிடைக்கும் வரையிலும் நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றார்.