சென்னை அண்ணா சாலை தலைமைத் தபால் நிலையத்தை முற்றுகையிட்டவர்கள் கைது!

போலீஸ்- ஆர்ப்பாட்டக்காரர்கள் தள்ளுமுள்ளு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடிப்பதைக் கண்டித்தும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அநீதியானது எனக் கூறியும், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர் சென்னையில் இன்று அஞ்சலக முற்றுகைப் போராட்டம் நடத்தினர். 

'அண்ணா சாலையில் உள்ள  தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிடும் போராட்டம்' என முன்னரே அறிவிக்கப்பட்டதால், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களுக்காக தாராப்பூர் டவர் பகுதியில் தடுப்பும் அமைத்தனர். ஆனால் பு.இ.மு. அமைப்பினர், அந்தப் பகுதியில் உள்ள மூன்று பேருந்து நிறுத்தங்களில் நின்றிருந்தனர். பேருந்து நிறுத்தங்களில் உள்ள பயணிகளிடமும் போலீஸார் முற்றுகைப் போராட்டத்துக்கு வந்திருக்கிறீர்களா எனக் கேட்டபடி இருந்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள்

சரியாக 11 மணிக்கு, நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஒரே இடத்தில் திரண்டு,  தீர்ப்பைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தடையை மீறி முழக்கமிட்டனர். தனித்தனிக் குழுவாக அவர்களை அப்புறப்படுத்த போலீஸார் முயன்றனர்.  அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீஸூக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை, பெண் போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கிச்செல்ல முயன்றனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் கைதுசெய்த போலீஸார், சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணத் தெருவில் உள்ள சமூக நலக் கூடத்தில் வைத்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!