`சுவாமிக்கு நைவேத்தியம் ஏன் படைக்கவில்லை?' - ராமேஸ்வரத்தில் நடந்த நூதன போராட்டம்

ராமேஸ்வரம் கோயிலில் சுவாமிக்கு நைவேத்தியம் படைக்காததை  கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் கோயிலுக்குள் வாழை இலை போட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

 ராமேஸ்வரம் கோயிலில் சுவாமிக்கு நைவேத்தியம் படைக்காததைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் கோயிலுக்குள் வாழை இலை போட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் கோயிலில் நெய்வேத்தியம் படைக்காததை கண்டித்து தர்ணா.

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோயில் பல நூற்றாண்டு பழைமை வாய்ந்தது. இங்கு சுவாமி மற்றும் அம்பாளுக்கு உச்சிகால பூஜை வேளையில் நைவேத்தியம் படைப்பது தொன்றுதொட்டு நடந்து வரும் நிகழ்வாகும். இதற்கென கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் சர்க்கரைப் பொங்கல் சுவாமிக்கு நைவேத்தியம் படைத்ததைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அந்தப் பிரசாதம் வழங்கப்படும்.

 இந்நிலையில் கடந்த ஒரு வாரக் காலமாக சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கப்படவில்லை எனவும் பக்தர்களுக்கு உச்சிகால பூஜை முடிந்து வழங்கப்படும் பிரசாதம் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. கோயில் நிர்வாகத்தின் இந்தச் செயலைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியினர், கோயில் அம்மன் சந்நிதி முன்பாக திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரசாதம் வழங்கப்படாததைச் சுட்டிக்காட்டும் வகையில் வரிசையாக வாழை இலை போட்டு பிரசாதத்துக்காகக் காத்திருக்கும் பக்தர்களைப்போல் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

 இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்த இந்தத் தர்ணா போராட்டத்தில் சுவாமிக்கு நைவேத்தியம் படைக்காமல் இருந்து வந்த கோயில் நிர்வாகத்தைக் கண்டித்தும், இதற்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கோயில் காவல் நிலைய போலீஸார் மற்றும் கோயில் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானம் செய்ததுடன், தொடர்ந்து நைவேத்தியம் படைக்கவும், பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!