வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (06/04/2018)

கடைசி தொடர்பு:18:31 (06/04/2018)

லாரியில் பட்டாசுப் பெட்டிகளை ஏற்றியபோது நடந்த விபரீதம்! பறிபோன 4 உயிர்கள்

சிவகாசி அருகே இரண்டு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர்

சிவகாசி அருகே, இரண்டு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் நான்கு பேர் பலியாகினர். மூன்று பேர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் விவரம் முழுமையாகத் தெரியவில்லை.

பட்டாசு


சாத்தூர் அருகே, ராமுதேவன்பட்டியிலுள்ள தனியார் பட்டாசுத் தொழிற்சாலையில், இன்று மதியம், லாரியில் பட்டாசுப் பெட்டிகளை ஏற்றும்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் ரவி, சேகர் ஆகிய இரு தொழிலாளர்கள் பலியானார்கள்.  மேலும், மூன்று பேர் காயம் அடைந்தனர். லாரி தீப்பிடித்து எரிந்தது. அருகிலுள்ள கட்டடங்களிலும் தீப்பிடித்தது. தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பெரிய அளவில் விபத்து பரவாமல் தடுத்தனர். எதனால் விபத்து ஏற்பட்டது என்பதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் நடந்த அதே நேரத்தில், சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டி எதிர்கோட்டையில்  அமைந்துள்ள மற்றொரு  பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு பெண் உட்பட இரு தொழிலாளர்கள் பலியானார்கள். இரண்டு பெண்கள் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வெடி விபத்து


ஒரே நாளில் இரண்டு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்டுள்ள வெடி விபத்து சம்பவமும், நான்கு உயிர்கள் பலியானதும் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  இதுபோன்ற விபத்துகள் நடக்கும்போது, கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு நடைமுறைப்படுத்தினாலும், விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்படும் வெடி விபத்து சம்பவங்கள், தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க