“தமிழகம்தான் மருத்துவப் படிப்புக்கான எண்ணிக்கையை அதிகம் பெற்றுள்ளது’’ பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பெருமிதம்!

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியின் 47 -வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு மருத்துவப்படிப்பு முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கினார்.

ஆளுநர் பான்வாரிலால் புரோஹித்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கி 51 வருடங்கள் ஆகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவ மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை 56 ஆக இருந்துவந்தது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் அதன் எண்ணிக்கை நூறாக உயர்த்தப்பட்டது. 100 இருக்கைகளை, முதல் பேட்ச் மாணவர்கள் இந்த ஆண்டு முடித்திருக்கிறார்கள்.

விழாவில் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “மருத்துவப் படிப்பு என்பது திறன் சார்ந்த படிப்பு. ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். புதிய நோய்களைக் கண்டுபிடிப்பது, ஏற்கெனவே உள்ள நோய்க்குப் புதிய சிகிச்சையைக் கண்டுபிடிப்பது என கடைசிவரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். முதலமைச்சர் காப்பீடு திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தாய்-சேய் நலத்திட்டம் என தமிழக அரசின் மருத்துவத் திட்டங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு இந்தத் திட்டங்களைக் கொண்டுசெல்ல முடியும். சிகிச்சையை மட்டும் செய்யாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

பன்வாரிலால் புரோஹித்

அடுத்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “இந்த விழாவில் ஆளுநர் பங்கேற்பது பெருமைக்குறிய விஷயம். 50 ஆண்டுகளைக் கடந்த சிறப்புடையது இந்தக் கல்லூரி. 12 கோடியில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய விபத்துக்கான அவசர சிகிச்சை மையமும்  3.50 கோடியில் இருதய சிகிச்சைப் பிரிவும் செயல்பட உள்ளன. இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலம்,தமிழ்நாடு. கடந்த 7 ஆண்டுகளில் 1000 எம்.பி.பி.எஸ் மெடிக்கல் சீட் அதிகரிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 562 சீட்டுகளை அதிகரித்திருக்கிறோம். இந்திய அளவில், தமிழகம்தான் மருத்துவப் படிப்பிற்கான எண்ணிக்கையை அதிகம் பெற்றிருக்கிறது" என்றார். 

 தமிழக ஆளுநர் பேசும்போது , “அனைவருக்கும் வணக்கம். சௌக்கியமா… தமிழ் தொன்மையான மொழி. நான் தமிழை விரும்புகிறேன். நீங்களெல்லாம் தமிழில் பேசியதால், நானும் தமிழில் பேச்சைத் தொடங்கினேன் என்றவர், “எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், மக்களுக்காக தினமும் வேலை செய்கிறார்கள். நானும் அப்படித்தான். அவர்களைப்போல தினமும் மக்களுக்காகப் பணியாற்றிவருகிறேன்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!