வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (06/04/2018)

கடைசி தொடர்பு:20:50 (06/04/2018)

"உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடக் கூடாது" பெ. மணியரசன் தாக்கு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், கட்டுமானப் பொறியாளர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடங்கிவைத்து உரையாற்றிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன், ‘காவிரிப் பிரச்னையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகக் குற்றம் சாட்டினார்.

உச்ச நீதிமன்றத்தை சாடிய மணியரசன்

 

இதுகுறித்துப் பேசிய அவர், ‘’உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கிய காவிரித் தீர்ப்பில், ‘இந்தத் தீர்ப்பு, 15 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். இதில் மறு விசாரணை கிடையாது. இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்” எனவும், தெளிவாகவும் அழுத்தமாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு தற்போது செயல் திட்டத்துக்கு விளக்கம் கேட்டு, மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை, உச்ச நீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருப்பது அநீதியானது.

தமிழ்நாட்டு தரப்பு வழக்கறிஞர் உமாபதி, வேறு ஒரு வழக்கிற்காக உச்ச நீதிமன்றம் சென்றபோது, ’காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்துவதை நிறுத்தச் சொல்லுங்கள். காவிரி நீரைப் பகிர்ந்து தர நாங்கள் ஏற்பாடுசெய்கிறோம்’ என அங்குள்ள நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள். இது ஏதோ, கட்டப்பஞ்சாயத்து செய்வதுபோல உள்ளது. இது சட்டவிரோதமானது. நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளவற்றைச் செயல்படுத்துவது சட்டப்பூர்வமான ஆணை. இதை மீறும் மத்திய அரசுமீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் தமிழர்களை வஞ்சிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள மாநிலக் கட்சிகள், உண்மைகளை மறைத்து நாடகமாடுகின்றன. அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், நடுநிலையாளர்கள் போராடினால்தான் தமிழ்நாட்டுக்கு விடிவு பிறக்கும். ஏப்ரல் 10-ம் தேதி, நெய்வேலி அனல்மின் நிலையம் முற்றுகை போராட்டத்தில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்றார்.