துறைமுகத்துக்குத் தடை கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவு!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம்

 

வ.உ.சி துறைமுகம் மற்றும் கப்பல் கட்டுமான நிறுவனம்

 

முத்துராமன் என்பவர், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் அளித்த மனுவில், " தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் இயங்கிவருகிறது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக சரக்குகளைக் கையாள்வதால், சுற்றுச்சூழல் மாசடைந்துவருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாநகரம் முழுவதும் தொழிற்சாலைகளால் நிரம்பிவருகிறது. தொழிற்சாலைகளின் விரிவாக்கப்பணிகளும் நடைபெற்றுவருகின்றன. இதனால், 'முத்து நகரம்' என்று அழைக்கப்படும் தூத்துக்குடி, மாசடைந்த மாநகரம் ஆகிக்கொண்டிருக்கிறது. மாசு அதிகமாவதால்,  நகர் பகுதிகள் விஷத்தன்மை அடைகின்றன். எனவே, தூத்துக்குடி துறைமுகம் செயல்பட இடைகாலத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி நிஷா பானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்துத் துறை செயலாளர், மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியச் செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியச் செயலாளர், தூத்துக்குடி மாவட்ட மாசுக்கட்டுபாட்டு வாரியப் பொறியாளர் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!