தி.நகரில் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் - போலீஸ் நிலையம் முற்றுகை, வி.சி.க., இளைஞர் இயக்கத்தினர் கைது

போலீஸ் சம்பவம்

சென்னையில், விதிமீறலாக வண்டியை ஓட்டிய இளைஞரை கடுமையாகத் தாக்கிய போலீஸாரைக் கண்டித்து, இன்று மாலை மாம்பலம் போலீஸ்நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, ஆர்ப்பாட்டம் செய்தவர்களையும் செய்தி சேகரிக்கச்சென்ற செய்தியாளர்களையும் போலீஸார் தாக்கினர். 

கடந்த 2 -ம் தேதி, சென்னை தியாகராய நகரில் பிரகாஷ் என்கிற இளைஞரை போக்குவரத்து போலீஸார் தாக்கியதோடு, சிறையிலும் அடைத்தனர். இதற்கு ஆதாரமான கண்காணிப்பு கேமரா வீடியோ பதிவை விகடன் தளத்தில் வெளியிட்டிருந்தோம். விதிமீறலாக வண்டி ஓட்டிவந்த இளைஞர்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய போலீஸார், ஒற்றை இளைஞரை மூன்று பேர் சேர்ந்து தாக்கிய காட்சி, மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த போலீஸாரின் செய்கையைக் கண்டித்தும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழ்நாடு இளைஞர் இயக்கம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு மாணவர் இயக்கம், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, ஐ.டி பணியாளர் மன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தியாகராய நகர் போலீஸ் நிலையம் முன்பாக, இன்று மாலை 6 மணியளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 ஆர்ப்பாட்டம் செய்தவர்களையும், செய்தியாளர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கிய போலீஸார், ஆர்ப்பாட்டக்காரர்களை அருகில் உள்ள கிருஷ்ணசாமி திருமண மண்டபத்தில் வைத்தனர். மூன்று பெண்களை மட்டும் சொந்தப் பிணையில் விட்டுவிட்டு, மற்ற 16 பேரையும் நீதிதுறை நடுவர்  மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!