வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (06/04/2018)

கடைசி தொடர்பு:23:00 (06/04/2018)

‘துப்பாக்கித் தோட்டா நெஞ்சைப் பிளந்தாலும்...’ - அதிரவைத்த புரட்சிகர இளைஞர் முன்னணியினர்!#wewantCMB

புரட்சி

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, ஈரோடு தலைமைத் தபால் நிலையத்தை புரட்சிகர இளைஞர் முன்னணியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

புரட்சிகர இளைஞர் முன்னணியினரின் இந்தப் போரட்டத்தை முன்கூட்டியே அறிந்த போலீஸார், உஷார்நிலையில் இருந்தனர்.  போராட்டம் நடைபெற்ற ஈரோடு தலைமைத் தபால் நிலையம், ஈரோடு எஸ்.பி அலுவலகத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. இருந்தும், கடந்த 2 நாள்களுக்கு முன் பெரியார் திராவிடர் கழகத்தினர் திடீரென ஒன்றுகூடி, தபால் நிலையத்துக்கு பூட்டுப் போட்டு சாலை மறியலில் இறங்கினர். இதனால், போலீஸார் சற்று தடுமாறிப்போயினர். அதுபோன்றதொரு சம்பவம் நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

புரட்சி

இந்த நிலையில், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பியபடியே நடந்துவந்து, ஈரோடு தலைமைத் தபால் நிலையத்தின் முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், அதிக அளவில் பெண்கள் கலந்துகொண்டிருந்தனர். அதிலும், ஒருசில தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளைத் தோளில் தாங்கியபடியே வெயிலையும் பொருட்படுத்தாமல் கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தின்போது, ’டெல்லி ஏகாதிபத்தியத்தால் தமிழகத்தின் காவிரி நீர் உரிமை பலியிடப்படுகிறது. காவிரி வடிநிலத்தைப் பாலைவனமாக்கி, மீத்தேன், ஹைட்ரோகார்பன் ஆகிய இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து, கார்ப்பரேட்டை கொழுக்கவைக்கவே முயற்சிகள் நடக்கின்றன. கங்கையைக் காக்க 1000 கோடி ஒதுக்கிய மோடி, காவிரி ஆற்றை அழிப்பது என்ன நியாயம்... என்று மத்திய அரசுக்கு எதிராகக் கோஷம் எழுப்பியவர்கள், ‘'துப்பாக்கித் தோட்டா நெஞ்சைப் பிளந்தாலும் அஞ்ச மாட்டோம். காவிரி நீர் கிடைக்கும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம்'’ என்று கூறி, போலீஸாரையே ஒருகணம் அதிரவைத்தனர்.

புரட்சி

கையில் கொடி, பதாகைகள் வைத்திருந்த இளைஞர்கள் மற்றும் ஆண்களை முதலில் கைதுசெய்த போலீஸார், பெண்களை ‘எம்மா போதும்மா...வேன்ல ஏறுங்கம்மா’ எனக் கெஞ்சிக் கூத்தாடி வேனில் ஏற்றிச்சென்றனர்.