வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (06/04/2018)

கடைசி தொடர்பு:23:30 (06/04/2018)

மணல் குவாரிக்கு எதிராகக் களமிறங்கிய 36 பஞ்சாயத்துக் கிராமங்கள்!

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 36 பஞ்சாயத்துக்களிலும் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் கறுப்புக் கொடி ஏற்றி, பொது மக்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு

அரியலூர் மாவட்டம் திருமனூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில், ஆற்றிலிருந்து ராட்சத போர்வெல் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக குடிதண்ணீர் எடுத்துச்செல்லப்படுகிறது. மேலும், 10-க்கும் மேற்பட்ட குவாரிகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டு, தற்போது மூடப்பட்டுள்ளன.

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு

இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டதோடு, குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், புதிய குவாரி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் அனைத்துக் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு

ஆனால், மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், திருமானூர் ஒன்றியத்தில் உள்ள 36 பஞ்சாயத்துக்களிலும் கிராம மக்கள்  தம் வீடுகள் மற்றும் தெருக்களில் கறுப்புக்கொடிகளை ஏற்றி, விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சியினரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். பல்வேறு மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயிகளின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள கொள்ளிடம் ஆற்றில் குவாரி அமைப்பதைக் கைவிட்டு, தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால், நிலைமை வேறு மாதிரியாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.