தண்ணீரா... வாக்குச்சீட்டா! தமிழ்நாடா... கர்நாடகாவா! பி.ஜே.பி-க்கு செல்வாக்கு எங்கே? | Which will yield fruit for BJP , Tamil Nadu or Karnataka?

வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (07/04/2018)

கடைசி தொடர்பு:09:45 (07/04/2018)

தண்ணீரா... வாக்குச்சீட்டா! தமிழ்நாடா... கர்நாடகாவா! பி.ஜே.பி-க்கு செல்வாக்கு எங்கே?

தண்ணீரா... வாக்குச்சீட்டா! தமிழ்நாடா... கர்நாடகாவா! பி.ஜே.பி-க்கு செல்வாக்கு எங்கே?

காவிரி மேலாண்மை வாரியத்துக்கும் கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்? அலசுகிறது இந்தக் கட்டுரை!

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம், 'காவிரியிலிருந்து தமிழகத்துக்கு, ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை அடுத்த 15 ஆண்டுகளுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்' என கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு சொன்னது உச்ச நீதிமன்றம்.

ஆறு வாரங்கள் முடிந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல், 'மூன்று மாத அவகாசம் தாருங்கள்... கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்' என்றெல்லாம் சொல்லி, 'ஸ்கீம்' என்றால் என்ன? என அர்த்தம் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டின் கதைவைத் தட்டியிருக்கிறது. கடைசி நேரம் வரை காத்திருந்து கழுத்தறுத்திருக்கிறது மோடி அரசு. கையாலாகாத நிலையில் இருக்கிறது எடப்பாடி அரசு.

காவிரி - தமிழ்நாடு சட்டசபை

'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' எனச் சொல்லி தமிழகம் கொந்தளித்துக்கொண்டிருக்கும் சூழலில், கர்நாடகா சட்டசபைக்குத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. மே 12-ம் தேதி கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக போராடிவரும் காவிரிப் பிரச்னையில், கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் இறுதித் தீர்ப்பு கிடைத்த நிலையில், அதையும் செயல்படுத்தாமல் இருக்கிறது மத்திய அரசு. காரணம், கர்நாடகா சட்டசபைத் தேர்தல். 'தண்ணீரா... வாக்குச் சீட்டா?' என்றால், வாக்குச் சீட்டுக்குதான் வலிமை அதிகம்.

தென்னிந்தியாவில் பி.ஜே.பி-க்கு செல்வாக்கு உள்ள மாநிலம், கர்நாடகம் மட்டும்தான். கர்நாடக சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக 1983-ம் ஆண்டுதான் பி.ஜே.பி போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் 7.93 சதவிகித வாக்குகள் பெற்ற பி.ஜே.பி., 18 இடங்களில் வெற்றிபெற்று, கர்நாடக சட்டசபைக்குள் முதன்முறையாக நுழைந்தது. அதன்பிறகு, 1985-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி.-யின் செல்வாக்கு சரிந்தது. 3.88 சதவிகித வாக்குகளைப் பெற்று, இரண்டே இடங்களில்தான் வெற்றிபெற்றது. அதன்பின், 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நான்கு இடங்களில் (வாக்கு சதவிகிதம் 4.14) வென்றது. அதைத் தொடர்ந்து, 1994-ம் ஆண்டு தேர்தலில்தான் பி.ஜே.பி செல்வாக்கு உயர ஆரம்பித்தது. 16.99 சதவிகித வாக்குகளைப் பெற்று, 40 தொகுதிகளைக் கைப்பற்றியது. 1999 தேர்தலில் இன்னும் முன்னேறியது. 44 இடங்களைக் கைப்பற்றியது பி.ஜே.பி.

2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பி.ஜே.பி-யின் செல்வாக்கு அப்படியே இரண்டு மடங்காக உயர்ந்தது. 28.33 சதவிகித வாக்குகளைக் குவித்து, 79 தொகுதிகளை வென்றது. அந்தத் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், அதிக இடங்களைக் கைப்பற்றி பிரதான கட்சியாக உயர்ந்தது பி.ஜே.பி. அந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு 65 இடங்களும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 58 இடங்களும் கிடைத்தன. இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தரம் சிங் முதல்வராகப் பொறுப்பேற்று 2006 வரை ஆட்சிசெய்தார். காங்கிரஸ் கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை மதசார்பற்ற ஜனதா தளம் வாபஸ் பெற... தரம் சிங் ஆட்சி கவிழ்ந்தது. பிறகு, மதசார்பற்ற ஜனதா தளமும் பி.ஜே.பி-யும் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்தன. மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாரசாமி முதல்வராகவும் பி.ஜே.பி.யைச் சேர்ந்த எடியூரப்பா துணை முதல்வராகவும் பதவியேற்றனர். முதல் 20 மாதங்களுக்கு குமாரசாமியும், அடுத்த 20 மாதங்களுக்கு எடியூரப்பாவும் முதல்வர் பதவியை வகிக்கலாம் என ஒப்பந்தம் போட்டிருந்தார்கள். ஆனால், அந்த ஒப்பந்தம் 2007 அக்டோபரில் மீறப்பட்டன. இதனால், குமாரசாமிக்கு அளித்துவந்த ஆதரவை பி.ஜே.பி வாபஸ் பெற்றதால், ஆட்சி கவிழ்ந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

கர்நாடக சட்டசபை

2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்தான் பி.ஜே.பி-க்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. 110 இடங்களை பி.ஜே.பி பிடித்தது. மெஜாரிட்டி கிடைக்காதபோதும் சுயேட்சைகளின் ஆதரவில் முதன்முறையாக கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்தது பி.ஜே.பி. தென்னிந்தியாவின் முதல் பி.ஜே.பி முதலமைச்சர் ஆனார் எடியூரப்பா. நில ஊழல் வழக்குகளில் சிக்கி, 2011-ம் ஆண்டு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார் எடியூரப்பா. அதன்பின், 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பி.ஜே.பி-க்கு 40 இடங்கள்தான் கிடைத்தன. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. சித்தராமையா முதல்வர் ஆனார். இந்த ஆட்சியின் ஐந்தாண்டுக் காலம் முடியப்போகும் நிலையில்தான், இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படிருக்கிறது. எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிடத் துடிக்கிறது பி.ஜே.பி. கர்நாடகாவுக்கு சாதகமாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், கர்நாடகா வாக்குகளை அள்ள நினைக்கிறது பி.ஜே.பி.

காவிரி

தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு இருக்கும் செல்வாக்கு ஊரறிந்தது. நோட்டோவுடன் போட்டிபோட்டு தோற்ற வரலாற்றை தமிழகத்தில் படைத்தது பி.ஜே.பி. தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு இருக்கும் மதிப்பு என்ன? என்பதையும் பார்த்துவிடுவோம்.

தமிழ்நாடு சட்டசபைக்குள் இரண்டு முறைதான் பி.ஜே.பி நுழைந்தது. 1996 சட்டசபைத் தேர்தலில் ஒரு தொகுதியில் பி.ஜே.பி வெற்றி பெற்றது. பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து தனி ஒருவனாக வேலாயுதம் என்பவர் எம்.எல்.ஏ ஆனார். அதன்பிறகு, 2001 சட்டசபைத் தேர்தலில்தான் அதிகபட்சமாக நான்கு இடங்களில் பி.ஜே.பி வென்றது. அதுவும் தி.மு.க கூட்டணி தயவில். கே.என்.லட்சுமணன் (மயிலாப்பூர்), முரளிதரன் (தளி), ஜெக வீரபாண்டியன் (மயிலாடுதுறை), ஹெச்.ராஜா (காரைக்குடி) ஆகிய நான்கு பேர்கள்தான் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்கள். அந்தத் தேர்தலுக்குப் பிறகு, இன்றுவரை பி.ஜே.பி-யால் சட்டசபைக்குள் நுழைய முடியவில்லை.

காவிரி

நாடாளுமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், தமிழகத்தில் 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்தான் அதிகபட்சமாக நான்கு இடங்களை பி.ஜே.பி பிடித்தது. தி.மு.க கூட்டணியில் இருந்தபோதுதான் அந்த இடங்களையும் கைப்பற்றியது. இப்போது, தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு இருக்கிற ஒரே எம்.பி, பொன் ராதாகிருஷ்ணன் மட்டும்தான். அவரும் தே.மு.தி.க. பா.ம.க. ம.தி.மு.க. கூட்டணி ஆதரவில் ஜெயித்தவர்.

கர்நாடகாவில் காங்கிரஸுக்கும் பி.ஜே.பி-க்கும்தான் செல்வாக்கு. மத்தியில் இந்தக் கட்சிகள் ஆட்சிக்கு வரும். ஆனால், தமிழகத்தில் பி.ஜே.பி-யால் காலூன்ற முடியாது. ஓட்டு கிடைக்காத தமிழகத்துக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதைவிட, ஓட்டு கிடைக்கும் கர்நாடகாவுக்காக மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருப்பதே அரசியல் சாணக்கியம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்