தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி எடுத்து விசாரித்த வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு..! | Madurai corporation case was heard by chief justice

வெளியிடப்பட்ட நேரம்: 01:15 (07/04/2018)

கடைசி தொடர்பு:01:15 (07/04/2018)

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி எடுத்து விசாரித்த வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு..!

செய்தித்தாளில் வெளியான செய்தியின் அடிப்படையில் வழக்கு ஒன்று தலைமை நீதிபதி எடுத்து விசாரித்தார்

மதுரை

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் செய்தித்தாளில் வெளியான செய்தியின் அடிப்படையில் வழக்கு ஒன்றை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி எடுத்து விசாரித்தார். அதில், மதுரை கோரிப்பாளையத்தை அடுத்த செல்லூர், பந்தல்குடி உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர்க் கால்வாயில் தேங்கியுள்ள குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி  கழிவுநீர் வைகை ஆற்றில் கலப்பதைத் தடுக்க வேண்டும். ஆழ்வார்புரத்திலுள்ள கழிவுநீர்க்குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் செல்வதைத் தடுக்க, உடைந்த குழாயை மாற்றி, கழிவுநீர் வெளியேறுவதைச் சரிசெய்ய வேண்டும். அதேபோல, மதுரை ஆரப்பாளையம் பேருந்துநிலையத்தின் பின்புறம், பொன்னகரம் மழைநீர்க் கால்வாயில் பல ஆண்டுகளாகத் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நீக்கித் தூர் வாராததால், மழைநீர் கால்வாய்களில் வந்து தேங்கிய கழிவுநீர், சாலைகளில் செல்கிறது. இதனால், அந்தப் பகுதிகளில் குடியிருப்போருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதேபோல, அந்தக் கால்வாயில் பாதுகாப்பற்ற முறையிலுள்ள மரப்பாலத்தால், கடந்த ஓராண்டில் 3 பேருக்கு மேல் கால்வாயில் விழுந்துள்ளனர். இதுகுறித்து கவுன்சிலர் முதல் மாநகராட்சி அதிகாரிகள் வரை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என செய்தித்தாள்களைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு, சம்பந்தப்பட்ட செல்லூர் பந்தல்குடி கால்வாய், ஆழ்வார்புரம் கழிவுநீர்க் குழாய், பொன்னகரம் கால்வாய் என வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பது, கால்வாயில் தேங்கிய கழிவுநீர் அகற்ற கால்வாய் தூர் வாருவது, சாலையில் கழிவுநீர் செல்லாமல் குழாய் உடைப்பைச் சரிசெய்வது என, மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகப் பணியைத் தொடங்கி தூர் வாருவதுடன், மரப்பாலத்தை அகற்றி, பாதுகாப்பான பாலம் அமைத்து, 7 நாள்களில் அறிக்கையைப் புகைப்பட ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு பிரப்பித்திருந்தது.  மேலும், பிளாஸ்டிக் கழிவுகளைப் போடுபவர்கள்மீது அபராதம் விதிப்பதுடன், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆணை பிறப்பித்திருந்தது .

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நிஷா பானு முன்னிலையில் விசாரித்தபோது, மதுரை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது என்றும் தற்போதய நிலை அறிக்கையைத் தாக்கல்செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது எனவும் கேட்டார். அதைக் கேட்ட நீதிபதிகள், இரண்டு வார கால அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.