வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (07/04/2018)

கடைசி தொடர்பு:17:07 (12/07/2018)

தண்ணீர் பிரச்னையைக் குறித்து ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்..!

 

கடந்த முப்பது வருடங்களில் இப்போது அதிக வெயில் தாக்குவதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இப்போதே ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை தலைதூக்க தொடங்கியிருக்கிறது. கோடைக்காலத்தை சமாளிக்கும் பொருட்டு குடிநீர் பிரச்னை உடனுக்குடன் சரிசெய்யப்படும்" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் உறுதியளித்துள்ளார். 

கரூர் மாவட்டத்தில் எதிர் வரும் கோடைக்காலத்தில் குடிநீர் விநியோகம் சீராக இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள். கரூர் மாவட்டம், அழகம்மை மஹாலில் க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், தோகமலை, குளித்தலை, அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், ஒன்றியப் பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, `குடிநீர், தெரு விளக்குகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து வரும் கோரிக்கை மனுக்கள் மீது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர்கள், உதவி நிர்வாகப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மின் வாரிய அலுவலர்கள் கலந்தாலோசனை செய்து அவர்களுக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் தேவைகள் மற்றும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். அதேபோல், கோடைக்காலத்தை சமாளிக்கும் விதத்தில் குடிநீர் சம்பந்தமான பிரச்னையை உடனுக்குடன் சரிசெய்ய அலுவலர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.