வெளியிடப்பட்ட நேரம்: 03:50 (07/04/2018)

கடைசி தொடர்பு:08:46 (07/04/2018)

நிலக்கரி கையாள்வதற்கு எதிர்ப்பு..! சீமான், வ.கௌதமன், தமிமுன் அன்சாரி ஆர்ப்பாட்டம்

MARG Fort

புதுவை மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ள மார்க் தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி துகள்களால் நாகூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து நாகை தொகுதி எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி தலைமையில் கறுப்புக் கொடியேந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.  

MARG Fort

நாகை மாவட்டம் நாகூர் எல்லை அருகே காரைக்காலில் மார்க் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் நாகூர், பனங்குடி, வாஞ்சூர், பட்டினச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பகுதி மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு மார்க் துறைமுகத்தில் நிலக்கரியை முற்றிலுமாய் தடைசெய்ய வேண்டும் என்று போராட்டக்குழுவினர் வலியுறுத்தினர்.

மேலும், புதுவை அரசின் சுற்றுச் சூழல் துறையும், மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இதற்கான அனுமதியை நீட்டிக்கக் கூடாது என்றும் இக்கோரிக்கைக்குத் தமிழக அரசும் துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.  

MARG Fort 2

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசுகையில், `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் எங்கும் மக்கள் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இதைப் பற்றி இந்த அரசு கவலைப்படுவதே இல்லை. மக்களுக்காகத்தான் அரசு என்பதை புரிந்துகொள்ளவுமில்லை' என்றார். இதே கருத்தை வலியுறுத்தி இயக்குநர் கௌதமன், முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன் ஆகியோரும் பேசினர்.  

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இதில் உச்ச நீதிமன்றமே நேரில் தலையிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், பெட்ரோலிய மண்டலம், மீத்தேன் எடுப்பு, ஹைட்ரோ கார்பன் எடுப்பு என்று காவிரிப் படுகையை நாசமாக்கும் அனைத்துத் திட்டங்களையும் எதிர்ப்பதாகவும், தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்றும், தேனி மாவட்டத்தில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்குழுவினர் தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க