ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருந்த கடவூர் கே.கே.ஜி.முத்தையா காலமானார்..!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருந்த கடவூர் ஜமீன் கே.கே.ஜி.முத்தையா இயற்கை எய்தினார். ஏராளமானோர் அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

1957-ம் ஆண்டு பஞ்சப்பட்டி தொகுதியில் காமராஜரால் தேர்தலில் நிற்க வைக்கப்பட்டு முதன்முறையாக எம்.எல்.ஏ-வானார் முத்தையா. கடவூர் ஜமீனான அவர், அதன்பிறகு 1962-ம் பீரியடிலும் அதே பஞ்சப்பட்டி தொகுதியில் காமராஜரால் நிற்க வைக்கப்பட்டு வெற்றிவாகை சூடினார். அதன்பிறகு,1967-ம் சட்டமன்றத் தேர்தலில் கடவூர் தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து அப்போது தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் தி.மு.க கட்சி ஆரம்பகால தலைவர்களில் ஒருவரும், கலைஞரின் நெருங்கிய நண்பருமான அன்பில் தர்மலிங்கம். அதன்பிறகு,1971-ம் ஆண்டில் அதே கடவூர் தொகுதியில் நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல்,1977-ம் ஆண்டில் கடவூரில் இவரைத் தோற்கடிக்க, அப்போதைய ஆளுங்கட்சியினரால் கடவூர் தொகுதி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இருந்தாலும், அருகாமை தொகுதியான மருங்காபுரி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக களம் கண்டு ஐந்தாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார்.

அதன்பிறகு, பல்வேறு உள்ளாட்சி மன்ற பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். மூப்பனார் காங்கிரஸிலிருந்து பிரிந்து த.மா.கா கட்சியை ஆரம்பித்தபோது, கருப்பையா அந்தக் கட்சியில் ஐக்கியமானார்.

இவர் தந்தை பெரியார், காமராஜர், ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர், கலைஞர், மூப்பனார், மா.பொ.சி, சிவாஜி கணேசன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரோடு நெருங்கிப் பழகியர். இவர் கரூர் மாவட்டத்தில் அசைக்க முடியாத தனி செல்வாக்கு உடையவராக இருந்து வந்தார். இவர் ஒரு தொகுதியில் போட்டியிட்டால், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த அந்தத் தொகுதிவாசிகள் யாரும் இவரை எதிர்த்துப் போட்டியிட அஞ்சுவார்கள். 

அதனால், அவரை எதிர்த்து வேட்பாளர்களை வெளி மாவட்டங்களிலிருந்துதான் மாற்றுக்கட்சியினர் தேடிப் பிடித்து நிறுத்துவார்கள். அந்த அளவுக்குச் செல்வாக்கானவர். கடவூர் ஜமீன் என்றாலும், எல்லோரிடமும் இறங்கிப் பழகுவார். அதனாலேயே, அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்" என்கிறார்கள் கடவூர்வாசிகள். வயோதிகம் காரணமாக அவர் இயற்கை எய்தினார். இவருக்கு கார்த்திக், தொண்டைமான் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று(07.04.2018) நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஜி.கே.வாசன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!