கட்சி நிர்வாகியின் குழந்தைக்குப் பெயர் சூட்டிய கமல்ஹாசன்..!

 

மக்கள் நீதி மய்யத்தின் புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர் சுதாகரின் மகனுக்கு கமல்வாசன் என்று பெயர் சூட்டினார் கமல்ஹாசன்.

அந்தக் குழந்தைக்கு ஒரு பவுன் செயின் அணிவித்ததோடு, சுதாகரின் மனைவி, தாய் என குடும்பத்தினருக்கே விருந்து வைத்து அசத்தி இருக்கிறார் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி, பரபரப்பாகச் செயல்பட்டு வருகிறார். தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மக்களோடு இணைந்து குரல் கொடுத்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தியிருக்கிறார். அந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்த கமல்ஹாசனைத்தான் புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர் சுதாகர், அவரது தாய், மனைவி, கைக்குழந்தையுடன் சென்று ஹோட்டலில் சந்தித்திருக்கிறார். அப்போது,கமல்ஹாசனிடம் தனது மகனைக் கொடுத்து குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொல்ல, கொஞ்சமும் யோசிக்காத கமல், குழந்தையைக் கையோடு ஏந்தி கொஞ்சி கமல்வாசன் என்று பெயர் வைத்தார்.

அதோடு, குழந்தைக்குத் தனது அன்பு பரிசாக ஒரு பவுன் சங்கிலியை அணிவித்து, அழகு பார்த்தார். தொடர்ந்து, கமல் சுதாகர் குடும்பத்துக்கு என்று மட்டும் தனி விருந்தும் கொடுத்து அசத்தியிருக்கிறார். இதுகுறித்து சுதாகரிடம் பேசினோம், `கமல் சாரை அழைத்து வந்து தனியாக புதுக்கோட்டையில் குழந்தைக்குப் பெயர்சூட்டும் விழா நடத்தணும்னு திட்டமிட்டேன். ஆனால், தலைவர் தொடர்ந்து மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதால், தேதி தரமுடியவில்லை. அதனால், திருச்சியில் போராட்டம் நடத்த அவர் வந்தபோது, அவர் தங்கியிருந்த ஹோட்டலில் குடும்பத்தோடு போய் சந்தித்தேன். கமல்வாசன்னு என் குழந்தைக்குப் பெயர் வைத்து அசத்திவிட்டார். எங்க குடும்பத்துக்கு மட்டும் விருந்தும் கொடுத்தார். எங்க குடும்பத்தின் மூத்தவர் அவர்' என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!