குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதியா? - ஹைதராபாத் பல்கலைக்கழக அம்பேத்கர் மாணவர் சங்கம்

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தரின் கைகளால் அளிக்கப்பட்ட பட்டத்தை மறுத்தவர் சுங்கண்ண வேல்புலா

        பல்கலைக்கழகம்

``திட்டம் மிகத் தெளிவாக வகுக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் தத்தாத்ரேயா குற்றம்சாட்டப்பட்டவர். குற்றச்சாட்டுக்கு ஆளானவரே நீதிபதியாக முடியுமா! அவர் மீதான வழக்கு இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பா.ஜ.க, அதன் வரலாறு முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டதாகத்தான் இருந்திருக்கிறது. 2019 பொதுத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் தலித்துகளுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரான நடவடிக்கைகளில் மிகத்தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள்” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார் அம்பேத்கர் மாணவர் சங்கத் தலைவர் டோந்த பிரஷாந்த்.

ஹைதராபாத் பல்கலைக்கழக மன்றக்குழுவின் உறுப்பினராக, முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், செகந்திராபாத் எம்.பியுமான பண்டாரு தத்தாத்ரேயாவை, மக்களவை சபாநாயகர் கடந்த மாதம் 27-ம் தேதி பரிந்துரைந்திருக்கிறார். கோகராஜூ ரங்கராஜு, கொண்டா விஸ்வேஸ்வர ரெட்டி ஆகியோரது பெயர்களுடன் அமைச்சர் பண்டாருவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரான பண்டாரு தத்தாத்ரேயாவைப் பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிட பரிந்துரைப்பது தலித் மாணவர்களுக்கு விரோதமான செயல் என்று அம்பேத்கர் மாணவர் சங்க மாணவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

                                          அம்பேத்கர் சங்க மாணவர் சுங்கண்ண

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழாவில், துணைவேந்தர் அப்பா ராவின் கைகளால் பட்டம்பெற மறுத்த மற்றொரு ஏ.எஸ்.ஏ மாணவர் சுங்கண்ண வேல்புலாவிடம் இதுகுறித்து பேசியபோது, ``ரோஹித் வெமுலாவின் தற்கொலை வழக்கில் தொடர்புடைய அமைச்சர் பண்டாரு, பல்கலைக்கழக மன்றத்தில் எவ்வாறு பங்கேற்கமுடியும்? ரோஹித் உட்பட எங்கள் நால்வரையும், கல்லூரி விடுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா. சட்டத்தின் ஆற்றலை குற்றம்சாட்டப்பட்டவர்களின் கைகளில் கொடுத்துவிட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? அன்றைய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணிக்கு, `ஹைதராபாத் பல்கலைக்கழகம், சாதிய, தீவிரவாத, தேசத்துரோகம் செய்பவர்களின் கூடாரமாக இருக்கிறது’ எனக் கடிதம் எழுதியவரும் இவர்தான். இத்தகைய நீதியற்ற நியமனம், பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர்களுக்கான சூழலை மேலும் மோசமாக்கும்” என்றார்.

( பல்கலைக்கழக மன்றம் - துறைத் தலைவர்கள், டீன், துணைவேந்தர், பல்கலைக்கழகத்தின் வருடாந்திர தணிக்கை அறிக்கைகள் மற்றும் கணக்குகளை நிர்வகிக்கும் மக்களவை உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழு)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!