துப்புரவுத் தொழிலாளியின் காலில் விழுந்த கிரண்பேடி! முகாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

``புதுச்சேரி அழகுக்குக் காரணம் நீங்கள்தான்” என்று சொல்லி பெண் துப்புரவுத் தொழிலாளியின் காலில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி விழுந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கிரண்பேடி

புதுச்சேரி சுகாதாரத்துறையும், மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையும் இணைந்து பெண் துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாமை நடத்தின. ஜிப்மர் சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடைபெற்ற இந்த முகாமில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கலந்துகொண்டார். அப்போது மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அவர், 250 பேருக்கு இலவச மருத்துவ சேவை பெறுவதற்கான அட்டைகளை வழங்கினார். அதையடுத்துப் பேசிய அவர், ``புதுச்சேரி அழகாகவும், தூய்மையாகவும் இருப்பதற்கு முக்கியக் காரணம் துப்புரவுத் தொழிலாளர்களின் சேவைதான்” என்று அவர்களைப் பாராட்டினார். உடனே மேடையில் நின்றிருந்த துப்புரவுப் பெண் பணியாளர் ஒருவர் கிரண்பேடியின் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரது காலில் விழுந்தார். உடனே, ``துப்புரவுப் பணிகளைச் செய்து நகரைத் தூய்மையாக வைத்திருக்கும் உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும்” என்று கூறி அந்தத் துப்புரவுப் பணியாளரின் காலில் விழுந்து நன்றி தெரிவிக்க பதறிப் போனார் பெண் பணியாளர்.

புதுச்சேரி

அதேசமயம் அங்கிருந்த அதிகாரிகளும், மற்ற துப்புரவுப் பணியாளர்களும் கிரண்பேடியின் இந்தச் செயலால் நெகிழ்ந்து போயினர். கடந்த 2016-ம் ஆண்டு துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவி ஏற்றுக்கொண்ட விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ விஜயவேணி கிரண்பேடியின் காலில் விழுந்தார். அப்போது, ``யாரும் யார் காலிலும் விழக் கூடாது. நீங்கள் விழுந்தால் நானும் விழுவேன்” என்று சொன்னதுடன் விஜயவேணி எம்.எல்.ஏ-வின் காலில் விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!