வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (07/04/2018)

கடைசி தொடர்பு:19:22 (07/04/2018)

தேசியக்கொடியை அவமதித்த வழக்கில் பொள்ளாச்சி இளைஞர் கைது!

தேசியக்கொடியை அவமதித்த வழக்கில், பொள்ளாச்சியைச் சேர்ந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் நியூட்ரினோ திட்டங்களுக்கு எதிராகவும் தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் வெற்றிவேல் (24), பொள்ளாச்சியில் தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் உறுப்பினராக உள்ளார். காவிரி மேலாண்மை அமைக்கக் கோரியும், நியூட்ரினோ திட்டம், ஸ்டெர்லைட் ஆலை திட்டங்கள் தமிழகத்துக்கு ஆபத்தானவை என்று கூறி, அவற்றை எதிர்த்து இந்திய தேசியக் கொடியைக் காலில்போட்டு மிதித்து, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்ததாகக் கூறப்படுகிறது. அவர்மீது ஆனைமலை போலீஸார், தேசியக் கொடி அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, நேற்றிரவு அந்த இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர். பின்னர், பொள்ளாச்சி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.