வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (07/04/2018)

கடைசி தொடர்பு:11:22 (07/04/2018)

ராணுவக் கண்காட்சி... சென்னை வருவாரா மோடி?

ராணுவக் கண்காட்சி... சென்னை வருவாரா மோடி?

தமிழகத்தில் நாள்தோறும் வலுத்துவரும் காவிரிப் போராட்டம் காரணமாக, சென்னையில் நடைபெறவிருக்கும் ராணுவக் கண்காட்சிக்கு பிரதமர் மோடி வருகை தருவது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும், ``சென்னை வரும் பிரதமருக்குக் கறுப்புக் கொடி காட்டி வரவேற்போம்'' என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சென்னையை அடுத்த திருவிடந்தையில் ராணுவக் கண்காட்சி `டிபெக்ஸ்போ - 2018' வரும் 11- ம் தேதி முதல் 1 4- ம் தேதி வரை நடக்கிறது. முதல்முறையாக இந்தக் கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது. காவிரி நீருக்கான போராட்டம் விஸ்வரூபம் அடைந்துள்ள நிலையில், மோடியின் வருகையும் இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மோடி

கடற்படை, ராணுவம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவுகளின் தளவாடங்கள் மற்றும் அதிநவீனத் தொழில்நுட்பம் குறித்த கண்காட்சியை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியப் பாதுகாப்புத் துறை நடத்திவருகிறது. கடந்தமுறை கோவா மாநிலத்தில் நடந்தது. தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயற்சி மேற்கொண்டதில் முதல்முறையாக, `பாதுகாப்புக் கண்காட்சி - 2018' சென்னையில் நடக்கிறது. மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை பகுதியில் 67 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அளவில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ராணுவத் தளவாடங்கள், போர்க் கப்பல்கள், ராணுவத் தளவாடத் தயாரிப்பு நிறுவனங்களின் பொருள்கள் ஆகியவை கண்காட்சியில் இடம்பெறும். இதில் 517 இந்திய நிறுவனங்களும், 154 சர்வதேச நிறுவனங்களும் பங்கேற்கின்றன. பாதுகாப்புக் கண்காட்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து 47 அதிகாரபூர்வ பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், செக்குடியரசு, பின்லாந்து, இத்தாலி, மடகாஸ்கர், மியான்மர், நேபாளம், போர்ச்சுகல், கொரியா குடியரசு, ஷெஷல்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து அமைச்சர் நிலையிலான பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். 

கண்காட்சி வளாகத்தின் எதிர்ப்புறம் கடலில் போர்க் கப்பல் நிகழ்த்தும் சாகசத்தைக் காண, கரையில் மிகப்பெரிய மேடை, ஹெலிகாப்டர் வந்திறங்கும் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர மருத்துவச் சேவைக்காக மருத்துவர்கள் குழு, ஆம்புலன்ஸ் வாகனங்கள், அத்தியாவசிய மருந்துகளுடன் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவ அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் இப்போதே பாதுகாப்புக் கெடுபிடிகள் தொடங்கிவிட்டன. இந்தக் கண்காட்சியில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் மற்றும் இந்திய விமானப் படையின் விமானக் காட்சி இடம்பெறுகிறது. விவாதக் கருத்தரங்குகளும் நடக்கின்றன. கண்காட்சியின் கடைசி நாளான 14- ம் தேதி அன்று பொதுமக்களுக்குப் பார்வையிட அனுமதி உண்டு. அப்போது நேரடி விமானச் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். பொதுமக்கள் வசதிக்காகச் சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகளும் கண்காட்சி நடைபெறும் இடத்துக்கு இயக்கப்பட உள்ளன. 

defenceexpo 2018

`இந்தியா வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தி தொகுப்பு' என்ற கருத்தை முன்வைத்து நடைபெறும் இந்தக் கண்காட்சியில், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உதிரிப் பாகங்களுக்கான ஏற்றுமதியாளராக இந்தியாவை முன்னிலைப்படுத்த உதவும்.  நாட்டின் பொதுத்துறையின் பலத்தை எடுத்துக்காட்டுவதுடன் இது இந்தியாவின் வளர்ந்துவரும் தனியார் துறை மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பரவலையும் வெளிப்படுத்தும் வகையில் அமையவிருக்கிறது. இப்படி, பாதுகாப்புக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தக் கண்காட்சிக்குப் பிரதமர் மோடியின் வருகை இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. அதாவது, தமிழகத்தில் காவிரி நீருக்கான போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. ``சென்னை வரும் பிரதமருக்குக் கறுப்புக் கொடி காட்டி வரவேற்போம்'' என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், வரும் 12- ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார் என்று டெல்லி தகவல்கள் சொல்கின்றன. முன்னதாக, வரும் 8- ம் தேதி ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகிறார். சென்னை ஐ.ஐ.டி-யில் நடைபெறும் விழாவில் அவர் கலந்துகொள்கிறார். பாதுகாப்புக் கண்காட்சி நடைபெறும் திருவிடந்தை மைதானத்தைப் பார்வையிடுகிறார். பாதுகாப்புக் கண்காட்சி குறித்து பேட்டி அளிக்கவும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. பிரதமர் மோடி 11- ம் தேதி வந்து இந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறாரா அல்லது வேறு ஒருநாளில் வருகிறாரா என்பது 8- ம் தேதி உறுதியாகத் தெரிந்துவிடும். பலத்த பாதுகாப்புக்கு இடையே நடைபெறும் இந்தக் கண்காட்சி ஏற்பாடுகளுக்கு இடையே பிரதமர் மோடி வருகையின்போது கொடுக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்