வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (07/04/2018)

கடைசி தொடர்பு:13:35 (07/04/2018)

''கருணாநிதி ஒருவார்த்தை சொல்லி இருந்தால்...!'' காவிரி பிரச்னையை விவரிக்கும் வைகைச்செல்வன்

''கருணாநிதி ஒருவார்த்தை சொல்லி இருந்தால்...!'' காவிரி பிரச்னையை விவரிக்கும் வைகைச்செல்வன்

``காவிரி பிரச்னையில் ராஜதுரோகம் செய்தது கருணாநிதிதான். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கருணாநிதி ஒருவார்த்தை சொல்லியிருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் என்றோ அமைக்கப்பட்டிருக்கும்'' என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான முனைவர் வைகைச்செல்வன் கூறினார். அவரின் பேட்டி :

``மத்திய அரசுக்குப் பயந்துகொண்டு, காவிரி பிரச்னையை அ.தி.மு.க சரியாகக் கையாளவில்லை என்று சொல்கிறார்களே..?''

``தமிழகத்தின் ஜீவாதார உரிமைப் பிரச்னையாக இருந்து வருவது காவிரி நதிநீர் பிரச்னை. 1892 ம் ஆண்டு மற்றும் 1924 ம் ஆண்டின் ஒப்பந்தங்கள் காவிரியில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமையைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அன்றைய ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்தே காவிரி ஆற்று நீரைத் தமிழகத்துக்குக் கொடுப்பது விஷயமாக 1924 ம் ஆண்டு 50 ஆண்டுகள் செல்லத்தக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1974 ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி, இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தவறியதன் விளைவாக இன்று கர்நாடக அரசு காவிரி பிரச்னையில் தொடர்ந்து தமிழகத்துக்குத் துரோகம் இழைத்து வருகிறது.

வைகைச்செல்வன்

1991 ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்னை பெரிய அளவில் வெடித்தது. தமிழக முதல்வராக  இருந்த ஜெயலலிதா, விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடியதுடன் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினார். அப்போது, கர்நாடக முதல்வரும் தண்ணீர் தரமுடியாது என்று எதிர்  உண்ணாவிரதம் இருந்தார். அதன் விளைவாக இந்தப் பிரச்னை உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்ற ஆலோசனைப்படி, இரு மாநிலங்களும் காவிரி நீரை பங்கீடு செய்வதற்காக மத்தியக் காவிரி நதிநீர் ஆணையம் உருவாக்கப்பட்டது. மேலும், 2007 ம் ஆண்டு மார்ச் 18 ம் தேதி அப்போதைய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கோரி அடையாள உண்ணாவிரதம் இருந்தார். இப்படி, காவிரி வரலாற்றைப் படித்தாலே அ.தி.மு.க பாதை, நேர் பாதை என்பது தெரியும்''.

ஜெயலலிதா

``அரசியல் லாபத்துக்காகவே காவிரியைக் காரணம் காட்டி மத்திய அரசை அ.தி.மு.க மிரட்டி வந்ததாக அப்போது குற்றச்சாட்டுகள் இருந்ததே..?''

``அதெல்லாம் எதிரிகளின் கற்பனைக் குற்றச்சாட்டு. சொந்தக் காரியத்துக்காக ஒரு நாளும், தமிழகத்தின் நலனை ஜெயலலிதா விட்டுக் கொடுத்தது இல்லை. 2011 ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 14.06.2011 அன்று பிரதமரை நேரில் சந்தித்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் இந்த ஆணையை நடைமுறைப்படுத்தக் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவினை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட பல்வேறு முயற்சிகளை, போராட்டங்களை ஜெயலலிதா முன்னெடுத்தார். அதன்பயனாக 2013 ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெஜட்டில்  மத்திய அரசு வெளியிட்டது. 

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளிவந்தது, முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 142 அடியாக உயர்த்தப்பட்டது என்ற இரண்டு இமாலய சாதனைகளையும் நிகழ்த்திக் காட்டியவர் ஜெயலலிதா மட்டும்தான். `இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன் கண் விடல்' என்ற வள்ளுவரின் வரிகளுக்கு ஜெயலலிதாவே பொருத்தமானவராகத் திகழ்ந்தார். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எட்டயபுரத்துக் கவிஞன் பாரதி, `வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்' என்று தொலைநோக்கோடு குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது''. 

`` `50 எம்.பி-க்கள் ராஜினாமா செய்து மத்திய அரசை வழிக்குக் கொண்டு வர வேண்டும். அப்படி அ.தி.மு.க எம்.பி-க்கள் ராஜினாமா செய்த மறுநிமிடமே தி.மு.க எம்.பி-க்களும் ராஜினாமா செய்வார்கள்' என்று ஸ்டாலின் அறிவித்துள்ளாரே?''

``தமிழகம் அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது. கல்வி, மருத்துவம், விவசாயம் என்று அனைத்துத் துறைகளிலும் முதல்வரும் துணை முதல்வரும் புரட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க வழியில் தி.மு.க நடக்கிறதா அல்லது அண்ணா வழியில் நடக்கிறதா என்று தெரியவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத்தேவையான யுக்திகளை நாங்கள் கையாண்டு வருகிறோம். வெற்றி ஒன்றே எங்கள் இலக்கு. தமிழகத்தில் ஐந்து முறை முதல் மந்திரியாக இருந்த கருணாநிதி, முல்லைப் பெரியாறு பிரச்னையாக இருக்கட்டும், காவிரி பிரச்னையாக இருக்கட்டும்... அதில் ஈடுபாடு கொள்ளாது, தன் சுயநலத்தை மட்டுமே பார்த்துக் கொண்டார். தமிழகத்தின் எந்தப் பிரச்னைக்கும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று அவர் நினைத்தது இல்லை. 

ஸ்டாலின் - காவிரி போராட்டம்

மாறாக செய்தித்தாள்களில் அறிக்கை விட்டும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியும் காலத்தைக் கழித்தார். மத்தியில் காங்கிரஸ் கட்சியோடு 17 ஆண்டுகள் கைகோத்துக்கொண்டு பதவி சுகத்தை அனுபவித்த கருணாநிதி, தமிழகத்துக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகத்தைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. தனது குடும்பம் செழிக்க கேரளத்திலும் கர்நாடகத்திலும் வணிகத் தொடர்புகளை நிலைநாட்டிக்கொண்ட கருணாநிதி, கேரள ஆட்சியாளர்களுக்கும் கர்நாடக ஆட்சியாளர்களுக்கும் எதிராக எந்தக் கருத்தையும் சொல்ல முன்வரவில்லை. அதுகுறித்து பகிரங்கமாகப் போராடவும் அவர் முன்வரவில்லை.

மைசூர் ராஜதானி -சென்னை மாகாணத்துக்கு இடையிலான 50 ஆண்டுகால காவிரி நீர் ஒப்பந்தத்தை 1974 ம் ஆண்டு திட்டமிட்டே புதுப்பிக்காமல் காலாவதியாக்கி, கபினி, ஹேமாவதி எனப் புதுப்புது அணைகளை கர்நாடகம் கட்டிக்கொள்ளத் துணைபோனவர் கருணாநிதி. கர்நாடகத்தின் அத்துமீறலை எதிர்த்து வழக்குப் போட்ட காவிரிப் படுகை விவசாயச் சங்கத்தின் வழக்கை தமிழக அரசே எடுத்து நடத்தும் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, அந்த வழக்கையே திரும்பப் பெற்ற சர்க்காரியா குற்றவாளிதான் கருணாநிதி. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நீராதார உரிமையை உச்சநீதிமன்றத்தின் மூலம் தமிழகம் போராடி உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பொன்னி நதியைப் போராடி மீட்டெடுத்தவர் ஜெயலலிதா மட்டும்தான்.

ஆனால், தமிழக விவசாயிகளின் இழப்புக்கும் இன்னலுக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதிதான் காரணமாக இருந்தார். அன்று வாளெடுத்துப் போரிட்டு வரவழைத்த உரிமைகளையெல்லாம், வெள்ளைத்தாளெடுத்தே வென்றெடுத்த வீரத்திருமகளாய் திகழ்ந்தவர்தான் ஜெயலலிதா. அவர், வழிகாட்டுதலில் நடக்கும் இந்த அரசு, தமிழகத்தின் நீராதாரப் பிரச்னைகளுக்காக சட்டப்போராட்டங்களின் மூலம் தொடர்ந்து போராடி தமிழகத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் என்பது திண்ணம்''.

கருணாநிதி

`` `காவிரியில் அ.தி.மு.க துரோகம் செய்துவிட்டது; பிஜேபிக்காக ஓவர் டைம் வேலை பார்க்கிறார்கள்' என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளாரே.?''

``எப்படியாவது இந்த அரசை அகற்றிவிட வேண்டும் என்று துடிக்கிறார் ஸ்டாலின். அவர் என்றும் தளபதிதான்; அந்தக் கட்சிக்குத் தலைவராகவும் முடியாது; தமிழ்நாட்டு முதல்வராகவும் வாய்ப்பு இல்லை. காவிரி நீர் வேண்டும் என்று ஜெயலலிதா இரண்டு முறை உண்ணாவிரதம் இருந்துள்ளார். ஆனால், கருணாநிதி இலங்கை தமிழர்களுக்காக அண்ணா சமாதி அருகே இருந்த உண்ணாவிரத காமெடியைப் பார்த்து உலகமே சிரித்தது. 

காவிரிக்காக, தமிழகம் முழுவதும் பல லட்சம் அ.தி.மு.க தொண்டர்கள் கடந்த 3 ம் தேதி ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர். முதல்வரும் துணை முதல்வரும் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர். அது உணர்வுபூர்வமானது. மத்திய அரசுக்கு நாங்கள் முறையாக அழுத்தம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். அ.தி.மு.க எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களது போராட்டம் பற்றி மக்களுக்குத் தெரியும். காவிரி பிரச்னையின் துரோக கதாநாயகன் தி.மு.க-தான். காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது கிடைத்த வாய்ப்பை எல்லாம் தி.மு.க தவற விட்டு அநீதி இழைத்தது. கூட்டணியை விட்டு விலகுவோம் என்று அப்போது கருணாநிதி ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், அப்போதைய காங்கிரஸ் அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்கும். எனவே, காவிரியில் ராஜதுரோகம் செய்ததே தி.மு.க-தான் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, அ.தி.மு.க ஆட்சியை குறுக்கு வழியில் வீழ்த்த பதவி ஆசையில் ஸ்டாலின் துடிக்கிறார். அவர் கனவு ஒருநாளும் நிறைவேறாது!''.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்