வெளியிடப்பட்ட நேரம்: 10:06 (07/04/2018)

கடைசி தொடர்பு:10:06 (07/04/2018)

`கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க கொடி' - அத்துமீறும் அமைச்சரின் ஆதரவாளர்கள்!


 

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு தொடர்ச்சியாக அ.தி.மு.க கட்சி கொடியை கரூர் மாவட்ட ஆட்சியரக முகப்பில் உள்ள தூண்களில் கட்டி எல்லை மீறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.  கரூர் மாவட்ட செயலாளராகவும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் இருப்பவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் ஆய்வுக்கூட்டங்களுக்கு கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வாரா வாரம் வருகை தருகிறார். அப்போது, ``அவரது ஆதரவாளர்கள் கலெக்டர் அலுவலகம் என்றும் பார்க்காமல், கலெக்டர் அலுவலக முகப்பில் உள்ள வளைவு தூண்களில் அ.தி.மு.க கொடியை கட்டி அலப்பறை செய்கிறார்கள். இதுபற்றி, கரூர் மாவட்ட கலெக்டரிடம் தொடர்ச்சியாக புகார் கொடுத்தும், நடவடிக்கை இல்லை" என்று புழுங்குகிறார்கள் கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.

கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில், இப்போதைய கலெக்டர் அன்பழகன் தலைமையில் எதிர்வரும் கோடைக்காலத்தை சமாளிக்க குடிநீர் பிரச்னையை உடனுக்குடன் சமாளிக்க அனைத்து ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதோடு, 226 முதியர்வர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியும், காவல்துறையில் பணியாற்றி பணியின்போதே இறத காவலர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த இரண்டு அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அதற்காக, தாந்தோன்றிமலையில் இருந்து கரூர் கலெக்டர் அலுவலகம் வரை வழிநெடுக அமைச்சரை வரவேற்று கட்சி கொடிகளை கட்டி இருந்தனர். அதேபோல், கரூர் கலெக்டர் அலுவலக முகப்பில் உள்ள வளைவிலும் ஒரு கொடியை கட்டி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
 
``கலெக்டர் அலுவலகமா, இவங்க கட்சி அலுவலகமான்னு தெரியாத அளவுக்கு தொடர்ச்சியாக இப்படி அமைச்சரின் ஆள்கள் கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க கொடியை அத்துமீறி கட்டுகிறார்கள். இவர்கள் இப்படி எல்லை மீறுவதை பார்த்து, மற்ற கட்சியினரும் அவர்களின் கட்சி கொடிகளை கலெக்டர் அலுவலகத்தில் கட்டினால், நிலைமை என்னாகும்?. அதனால், கலெக்டர் அன்பழகன் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.