ஒவ்வொரு மனிதரும் விழிப்படைந்து கொண்டாட வேண்டிய உலக சுகாதார தினம்!

பஞ்ச பூதங்களின் மொத்த உருவம்தான் பிரபஞ்சம். பிரபஞ்சத்தின் சிறிய வடிவம்தான் மனித உடல். ஆம், உடலும் பஞ்ச பூதங்களால் ஆனதுதான். ஒவ்வொரு மனிதரும் தூய்மையாக இருந்தாலே, இந்த ஒட்டுமொத்த பூமியும் நலம் பெறும் என்பது திண்ணம். உடலும் மனமும் தூய்மையாக இருந்தாலே, பெரும்பாலான நோய்கள் நம்மை அணுகாமலிருக்கும். சுகாதாரம், மனித வாழ்வின் ஆதாரம். இதை மனதில் கொண்டுதான் 1948-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலக நலவாழ்வு அமைப்பு, 1950-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி, உலக சுகாதார தினமாகக் கடைப்பிடிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளைக்கொண்டு இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

உலக சுகாதார தினம்

இந்த ஆண்டு, 'உலகளாவிய சுகாதார பாதுகாப்பு' என்ற கருத்தின் அடிப்படையில், இன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தனி மனிதருக்கும் சுகாதார பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொண்டாடப்படுகிறது. உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு சுகாதார பாதுகாப்பளிக்கும் பணியைச் செய்ய உலக நாடுகளை உலக நலவாழ்வு அமைப்பு வலியுறுத்துகிறது. உணவு, குடிநீர், காற்று, இருப்பிடம், வாழும் முறை என எல்லாவற்றிலும் சுகாதாரம் பேணப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த நாள் 68 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், பல நாடுகள் சுகாதார நிலையில் தன்னிறைவை எட்டவில்லை என்பதே உண்மை. இதற்கு, ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், சுகாதாரம் ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். அதற்கு, அந்தந்த நாடுகள் பொறுப்பேற்க வேண்டும். மனிதனே மனிதக்கழிவுகளை அள்ளும் நிலை ஒழிய வேண்டும். ஒவ்வொரு மனிதரும் விழிப்படைந்து கொண்டாடவேண்டிய உலக சுகாதார தினம் இன்று.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!