வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (07/04/2018)

கடைசி தொடர்பு:11:28 (07/04/2018)

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 4,000 மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

நெல்லை மாவட்டம் இடிந்தகரையைச் சேர்ந்த மீனவர்கள், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் குமரி சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கடல் தொழிலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம், இடிந்தகரையைச் சேர்ந்த மீனவர்கள், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் குமரி சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கடல் தொழிலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 4,000 மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் வீரியத்துடன் போராடியதன் மூலம் நாடு முழுவதும் கவனத்தைப் பெற்ற கிராமம் இடிந்தகரை. மீன் பிடித்தொழிலை நம்பி வாழும் மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தினர் இன்று தொழிலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாழ்வாதாரத்தை அழித்து உருவாக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு எதிராக இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

குறிப்பாக, தூத்துக்குடியில் செயல்பட்டு வரக்கூடிய ஸ்டெர்லைட் நிறுவனத்தால் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதால் பல்வேறு கிராமங்களில் போராட்டம் வெடித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் விரிவாக்கப்பணிகளைத் தடுத்து நிறுத்தக்கோரியும் பொதுமக்கள் போராடிவருகிறார்கள். அதேபோல, குமரி மாவட்டத்தில் அமைய உள்ள சரக்குப் பெட்டக மாற்று முனையத்தால் தங்களின் வாழ்வாதாரம் பறிபோகும் எனக் குமரி மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், குமரியில் அமைய உள்ள சரக்குப் பெட்டக மாற்று முனையத்துக்கு எதிராகவும் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நெல்லை மாவட்டம், இடிந்தகரையைச் சேர்ந்த மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இடிந்தகரையைச் சேர்ந்த சுமார் 4,000 மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. அதனால் நாட்டுப்படகுகள் அனைத்தும் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.